சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

38

வினைக்கொருங்கியலும்  என்று  வினைக்கே  கூறுதலாற்  பெயர்க்கு
யாது முற்கூறினும் அமையும் என்பது.

(எ - டு.) சாத்தன் அவன்; அவன் சாத்தன் எனவரும்.

இதனாற்    சொல்லியது பொருட்பெயரோடு சுட்டுப்பெயர் கூறும்வழி
பிற்கூறாது முற்கூறின் பிற பொருள்  மேலே  நோக்குப்படநிற்பது கண்டு
அவ்வாறு கூறற்க என மரபு வழுக் காத்தவாறு. (எ - று.)         (38)

எய்தியது விலக்கல்
 

39.

முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே.
 

என் - எனின் எய்தியது விலக்குதல் நுதலிற்று,  

(இ - ள்.)   மூவகைப்    பெயர்களுள்   சுட்டுப்பெயரை  முற்படச்
சொல்லுதல் செய்யுளிடத்தாயின் அமையும், (எ - று.)

(எ - டு.) “அவனணங்கு நோய்செய்தான் ஆயிழாய் வேலன்,
        
    விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி -  
                                        முகனமர்ந்
 
            தன்னை யலர்கடப்பந் தாரணியி லென்னைகொல்,
 
            பின்னை யதன்கண் விளைவு”

என வரும். பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

இதனாற் சொல்லியது   முற்கூறலாகாது   என்னப்பட்ட சுட்டுப்பெயர்
மொழிமாற்றியும் பொருள்கொள்ளும் நயம் செய்யுட்கண் உண்மையான்
அதனகத்தாயின் அமையும் என்று நேர்ந்தவாறாயிற்று.            (39)

சுட்டுமுதலாகிய காரணக்கிளவியைச் சொல்லும்முறை
 

40.

சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெய ரியற்கையின் செறியத்தோன்றும்.

 

என்  -  எனின்  இதுவுஞ்  சுட்டுப்பெயர்   ஆராய்ச்சியே  கூறுதல்
நுதலிற்று.

(இ - ள்.)  சுட்டெழுத்தை    முதலாகவுடைய   காரணப்பொருளை
உணரநின்ற  சொல்லும்  மேற்கூறிய   சுட்டுப்பெயர்   இயல்பு  போலப்
பெயரப்பின்னே யாப்புறத் தோன்றும், (எ - று.)

(எ - டு.)  சாத்தன்   கையெழுதுமாறு   வல்லன்   அதனால்  தன்
ஆசிரியன்  உவக்கும்;  சாத்தி  சாந்தரைக்குமாறு   வல்லள்   அதனாற்
கொண்டவன்   உவக்கும்   எனவரும்.   மேற்கூறிய   வகைகளெல்லாம்
இதற்கும் ஒக்கும்.

இதுவும்  ஆண்டே  யடங்காதோவெனின், ஆண்டுச் சுட்டுப்பொருள்
வழி   வந்தது,  ஈண்டு  அப்பொருளது   குணத்துவழி   வந்தது  என
உணர்க.                                                (40)