ஆராய்ச்சி முன்னுரை பண்டித வித்துவான், சைவப் புலவர், சித்தாந்த நன்மணி, கு, சுந்தரமூர்த்தி தமிழ்ப் பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி, திருப்பனந்தாள். “கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டு கொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல் உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 1. முன்னுரை மொழி ஒரு பேராறு போன்றது. அப்பேராற்றின் கரை போல்வது அதன் இலக்கணம் ஆகும். கரை ஆற்றின் ஓட்டத்தைத் தடை செய்யாது; ஆனால் அவ் வாற்றினை வரம்பில் நிறுத்தி வழிய விடாது பாதுகாக்கும். அதனால் துய்ப்பாரும் இனிது துய்க்க இயலும். இது போன்றதே இலக்கண வரம்புமாகும். அது மொழியின் இனிய செலவைத் தடுக்காது; ஆனால் அதனை ஒரு வரம்பில் நிறுத்தி இயங்கச் செய்யும். இத்தகைய இலக்கண வளம் நிறைந்ததது நமது தமிழ் மொழியாகும். “மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ ?’’ என வீறு கொள்ளும் அளவிற்கு நம் தமிழ்மொழி இலக்கண வளம் பெற்றுள்ளது. 2. தொல்காப்பியம் இலக்கணம் கூற வந்த நூல்கள் பலவேனும், செறிவும் செம்மையும் சேர்ந்து, அறிவும் அழகும் ஆர்ந்து விளங்கும் நூல் தொல்காப்பியமே ஆகும். இதனோடு ஒருங்கு வைத்து எண்ணுதற்குரிய இலக்கண நூல் இதுகாறும் எழுந்ததும் இல்லை; இனி எழப் போவதும் இல்லை. இத்தகைய சீர்மையும் நீர்மையும் நிறைந்து விளங்கும் நூல், தமிழர்தம் நாகரிகம், கலை, அறிவு இவற்றிற்குப் பெட்டகமாய் விளங்குவதாகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பகுப்பினை உடையது. ஒவ்வொரு பகுப்பும் ஒன்பது ஒன்பது இயல்களை |