சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

42

(இ - ள்.) வியங்கோட்கண்       எண்ணப்படும்      பெயரைத்
திணைவிராய்வரும் வரவினை நீக்கார்  கொள்வர்  ஆசிரியர், (எ - று.)

(எ - டு.)ஆவும் ஆயனுஞ் செல்க எனவரும்.

தன்னினமுடித்தல்   என்பதனான், வியங்கோளல்லாத விரவுவினைக்
கண்ணுஞ்  சிறுபான்மை   வருவன கொள்க. அவை ஆவும்  ஆயனுஞ்
சென்ற கானம் என்பன போல்வன.

இதனாற்    கூறியது  எண்ணின்கண்    திணைபற்றிப்    பிறக்கும்
மரபுவழூஉவமைதி என உணர்க.                            (45)

வேறுவினைப் பொதுச் சொற்களது மரபு
 

46.

வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்.
 

என் - எனின்   வேறுவினைப்   பொதுச்  சொற்களது  மரபுவழுக்
காத்தல் நுதலிற்று.

(இ - ள்.) வேறு     வினையுடையவாகிய     பல   பொருளையும்
பொதிந்துநின்ற   பொதுச்சொல்லை   ஒரு   பொருளது    வினையாற்
சொல்லார்  உலகத்தார்;  அதனான்  அவற்றிற் கெல்லாம் பொதுவாகிய
வினையானே சொல்லுக, (எ - று.)

(எ - டு.)  அடிசில்    கைதொட்டார்,    அயின்றார்;  அணிகலம்
அணிந்தார், மெய்ப்படுத்தார்; இயம் இயம்பினார், படுத்தார் எனவரும்.

இதனாற் சொல்லியது பலபொருட்குரிய  பொதுப்  பெயர்ச்சொல்லை
எடுத்து மேலதன் வினைகூறும் வழி மரபு வழுவற்க என்றவாறு.

இஃதிலக்கணமாகப்    பல பொருளும் ஒருசொல்லுதற்கண் அடங்கி
நில்லாது வேறு வேறு அடிசில்  எனவும், அணி எனவும் வரும் வரவும்,
ஒன்றன்வினை  யொன்றற்கு  வரும்   வரவும்  வழுவாக்கிச் “செய்யுண்
மருங்கினும்” (எச்ச-61) என்னும் அதிகாரப் புறனடையான்  அமைத்துக்
கொள்க என்பது.                                        (46)

இதுவுமது
 

47.

1எண்ணுங் காலும் அதுவதன் மரபே.
 

என் - எனின் இதுவும் அது.

(இ - ள்.) வேறுவினைப் பொதுச் சொற்களைப் பொதுமையிற் பிரித்து
எண்ணுங்காலத்தும்  ஒன்றன்  வினையாற்கிளவாது  பொது வினையாற்
கிளத்தல் அதற்கிலக்கணம், (எ - று.)


1. ‘எண்ணுங் காலை’ என்பது தெய்வச்சிலையார் பாடம்.