சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

47

பொதுவாய்      நின்றது.   அல்லன   எல்லாம் ஒரு சாதியை உணர
நிற்றலின்    பொதுமையிலவால்   எனின்,   அவ்வாறு   பொதுமைப்
படாதாயினும்  விகற்பித்து  நோக்கத் தம்முள்ளே சாதி மாறுபாடுடைய
என உணர்க.

இவற்றான்    உலகத்துப் பெயர்கள் எல்லாம் ஒரு பொருளோடும்,
ஓரிடத்தோடும்,   ஒரு  காலத்தோடும்,  பண்போடும்,  தொழிலோடும்,
உறுப்போடும்   படுத்துநோக்கப்  பலபொருள்  ஒருசொல்  எனப்படும்
போலும்.                                               (52)

வினை வேறுபடூஉம் பலபொருளொரு சொல்
 
  

53.

அவற்றுள்,
வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல்
வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும்
தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே.
 

என்  -  எனின்   மேற்கூறிய   பலபொருள்   ஒரு சொல்லினுள்
வினைவேறு   படூஉம்  பலபொருள் ஒரு சொல்லாமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

(இ - ள்.) மேற்  சொல்லப்பட்ட  இரண்டனுள்  வினை வேறுபடும்
பலபொரு   ளொருசொல்   வேறுபடுக்கும்   வினையானும்,   வினை
யோடுவரும்  இனத்தானும், சார்பினானும் இப்பொழுது இவன் கூறியது
இப்பொருள்  எனத்  தெளியத்  தோன்றும்  பொருளா ராய்ச்சிப்படும்
நிலைமைக்கண், (எ - று.)

(எ - டு.) மாப் பூத்தது, காய்த்தது: இவை வேறுபடு வினை. மாவும்
அரசும்  புலம்படர்ந்தன, மாவும் மருதும் ஓங்கின: இவை இனம் பற்றி
வந்தன. வில் பற்றி நின்று கோல் தா என்பதூஉம், தூம்பு பற்றி நின்று
கோல்  தா  என்பதூஉம்,  பலகைபற்றி  நின்று வாள் தா என்பதூஉம்
சார்பு பற்றி நின்றன.

உரையிற்கோடல்    என்பதனால் பல பொருளொரு சொல் வினை
இனம்  சார்புகளைப்பற்றிப்  பலபொருளை ஒழித்து ஒருபொருண்மேல்
நில்லாது,    சிலபொருளொழித்துச்   சிலபொருண்மேல்   நிற்பதூஉங்
கொள்ளப்படும்.

1‘கழிப்பூக் குற்றும் கானல் அல்கி’ என்றாற் போலவரும்.

இனமுஞ்    சார்பும் பற்றி வரும் அவையிற்றை வினைவேறுபடூஉம்
பலபொருள்  ஒருசொல்  என்றது  என்னை  யெனின்,  அவ்வினமுஞ்
சார்பும்  அவ்வினைச்  சொல்லை வேறுபடுக்கும்வழி அதனோடு  கூடி
நின்று   வேறுபடுப்பின்   அல்லது   தாமாக   நில்லாமை   நோக்கி
அவையிற்றையும் வினை வேறுபடூஉம் பலபொருள் ஒரு சொல்லென்ப.


1அகநானூறு 330.