உடையன. இந் நூலுக்கு உரை எழுதியோர் பலர் எனத் தெரியினும் இற்றைக்குக் காணும் பேற்றிக்கு இலக்காக இருப்பன அறுவர் உரைகளே யாகும். அவ்வறுவருள்ளும் நூல் முழுமைக்கும் கிடைக்கும் உரையாய் இருப்பது இளம்பூரணர் உரையேயாகும். நச்சினார்க்கினியரும், கல்லாடரும் நூல் முழுமைக்கும் உரை எழுதியிருப்பதாகத் தெரியினும் நச்சினார்க்கினியர் உரை மெய்ப் பாட்டியல், உவம இயல், மரபியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் கிடைத்திலது. கல்லாடர் உரை எழுத்ததிகாரம், பொருளதிகாரம், சொல்லதிகாரத்தில் இடையியல் 13ஆம் நூற்பாவிற்கு மேலும், உரியியல், எச்ச இயல்களுக்கு கிடைத்திலது. சேனாவரையரும், தெய்வச்சிலையாரும் சொல்லாதிகாரத்திற்கு மட்டுமே உரை செய்துள்ளனர். இதுவன்றிப் பெயர் தெரியாத பழைய உரையாசிரியர் உரை ஒன்றும் உளது. பேராசிரியர் பொருளதிகாரத்தில் உள்ள பின் நான்கு இயல்களுக்கு மட்டுமே உரை செய்துள்ளார். இவர் பொருளதிகார முற்பகுதிக்கும் உரை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. ஆயினும் இதுகாறும் கிடைத்திலது. 3. சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரைகள் பல தோன்றியிருப்பது ஏன்? இற்றைய நிலையில் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே அறுவர் உரைகள் உள்ளன. அவை வருமாறு : - (1) இளம்பூரணர் (2) சேனாவரையர் (3) நச்சினார்க்கினியர் (4) தெய்வச்சிலையார் (5) கல்லாடர் (6) பழைய உரை இவர்களுள் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் ஏனைய அதிகாரங்களுக்கும் உரை எழுதி உள்ளனர். கல்லாடர் ஏனைய அதிகாரங்களுக்கும் உரை எழுதியிருப்பதாகத் தெரியினும், அது கிடைத்திலது. சேனாவரையரும் தெய்வச்சிலையாரும் இவ்வதிகாரத்திற்கு மட்டுமே உரை எழுதியுள்ளனர். பெயர் தெரியாத பழைய உரைகாரரும் இவ்வதிகாரத்திற்கு மட்டுமே உரை செய்தனர் எனத் தெரிகிறது. இங்ஙனம் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரைகள் பல்கக் காரணம் என்னை ? இதனையும் சிறிது ஆராய்வாம். |