வியங்கொள வருதல்: ஆ செல்க என்பது. இது மேற்சொல்லுகின்ற வினை நிலையுணர்த்தலுள் அடங்கும்; ஆயினும் வேறுபாடுண்டு. அது தன்கண் நிகழ்ந்ததோர் வினை. இது மேல் தன்கண் தொழில் நிகழ்வதாக ஒருவனால் ஏவப்பட்டு நிற்கும் நிலை என உணர்க. வினைநிலையுரைத்தல் : ஆகிடந்தது என்பது. வினாவிற் கேற்றல் ஆயாது 1 என்பது பண்பு கொள வருதல் : ஆ கரிது என்பது. இதுவும் வினைநிலையுரைத்தலுள் அடங்காதோ எனின், அடங்கும் எனினும் வினைக் குறிப்பாகலான் வேறு கூறினார் என்பது. பெயர் கொள வருதல் : ஆ பல, ஆ இது என்பது. மேற்சூத்திரத்து எழுவாய் வேற்றுமை ‘பெயர்’ என்னாது ‘தோன்றுநிலை’ என்றதனால் பெயர்கள் ஓரோவழி எழுவாயாகத் தான் பயனிலை கொள்ளாது மற்றோர் எழுவாயின் பயனிலையோடு தானும் பயனிலையாயும், ஓரோவழித் தானே பயனிலையாயும், ஓரோவழி எழுவாயோடு இயைபுபடாது பயனிலைக்கு அடையாயும் பிறவாறாயும் வருவனவும் உள என்பது கொள்ளப்பட்டது. (எ - டு.) தானும் பயனிலையாயது, ஆயன் சாத்தன் வந்தான் என்பது. இது ஆயன் வந்தான் சாத்தன் வந்தான் என வினைப் பின்னும் நிற்கும் என்பது. சாத்தன் என்பது எழுவாய். ஆயன் என்பது முன்னே பயனிலையாய் நின்றதன்றாலோ எனின், அவ்வாறும் ஆம் எனினும் சொல்லுவான் கருத்து அன்னதன்று என்பது. ஆயனாகிய சாத்தன் என்பது பண்புத்தொகையாமாலோ எனின், ஓசை பிளவு பட்டிசைத்தலான் ஆகாது என்பது. தானே பயனிலையாயது, ஆ பல என்பது, பயனிலைக்கு அடையாயது, சாத்தன் தலைவனாயினானன் என்பது. பிறவாறாய் வருதல், ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என்பது. ஒரு பெயர் எழுவாயாய் நில்லாது பல பெயரும் ஒருங்கே எழுவாயாய் நிற்பன எனக் கொள்க. இன்னும் இவ்விலேசினான், பெயர்கள் எழுவாயாய்ப் பயனிலை கொண்டமைந்து முற்றிநில்லாது, எழுவாய்தானும் பயனிலையுங்கூடி ஒரு சொல்நீர்மைப்பட்டு மற்றோர் எழுவாய்க்குப் பயனிலையாய் வருவனவும் கொள்ளப்படும்.
1 ‘ஆவோ’ என்ற எடுத்துக்காட்டும் ஈண்டுக் காணப்படுகின்றது. ஆ யாது என்புழி வினையும் வினை முதலுமாய் வினாவப்பட்டுள்ளது. ஆவோ என்புழி இடைச்சொல்லாய்ப் பெயரையடுத்து வருகின்றது. ஆதலின் அது ஈண்டைக்கேற்குமா ? என்பது ஆயத்தக்கது. |