(1) மக்கள் முதல்முதல் பேசத் தொடங்கிய பொழுது முழுச் சொற்களையே பயன்படுத்தினர். பின்புதான் தாம் சொல்லும் சொல்லிற்கு உறுப்பாகிய எழுத்தினையும், அதன் இயல்பினையும் அறியலாயினர். எனவே முதலில் தோன்றியது சொல்லே. (2) குழந்தைகள் இன்றும் சொல்லாக உச்சரித்துப் பழகிய பின்புதான், எழுத்தினை உணர முற்படுகின்றன. (3) வட மொழியில் பொருள் இலக்கணம் இன்று. எழுத்தும், சொல்லுமே உள. அவற்றிலும் சொல்லிலக்கணத்தையே “வியாகரணம்” என வடமொழியாளர் கூறுகின்றனர். எனவே வடமொழியிலும் சொல்லிலக்கணமே சிறந்ததெனத் தெரிகிறது. (4) “எழுத்தினால் ஆக்கப்படுவதே சொல் எனினும், சொல் போல எக்காலத்தும் எழுத்துத் தோன்றி நிற்றல் இன்மையின் சொல்லே சிறந்ததாம்” என்பர் நேமிநாத உரையாசிரியர். (5) எழுத்ததிகாரம் எழுத்துக்களின் பெயர், முறை, தொகை, சொற்கள் ஒன்றோடு ஒன்று புணரும் முறைமை ஆகிய இவற்றை ஆராய்கின்றது. பொருளதிகாரமோ, பண்டைக்கால அகப்புற வாழ்வினையும், அவ்வாழ்வில் நிகழும் உள்ளத்துணர்ச்சி களைத் தெள்ளிதின் விளக்கும் மெய்ப்பாடுகளையும், செய்யுள் இலக் கணத்தையும் வழக்குச் செய்யுள் ஆகியவற்றின் மரபினையும் கூறுகின்றது. இவற்றில் எல்லாம் கருத்துவேறுபாடுகள் மிகுதியாக நிகழக் காரணம் இல்லை. ஆனால் சொல்லதிகாரத்திலோ, நான்கு வகைச் சொற்கள், அவற்றின் இலக்கணம், எழுவகை வழு, வழக்கு, செய்யுள் பற்றிய மரபு ஆகிய இவைகள் கூறப்படுகின்ற. மக்கள் தத்தம் கருத்தை ஒருவர்க்கொருவர் பரிமாறிக் கொள்ளுதற்குக் கருவியாக விளங்கும் இச்சொல் நடையிலேயே கருத்து வேற்றுமை மிக்கிருத்தல் இயல்பாம். ஆதலின் இவ்விலக்கணத்திற்கே பற்பல அறிஞர்களும் தத்தம் கருத்துக்களைத் தெரிவிக்க உரை எழுதினர் எனலாம். (6) அன்றியும் இன்றைய இலக்கண நூல்களில், நேமிநாதம், இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம் ஆகியனவும் இச்சொல் பற்றியே விரிவான இலக்கணத்தை இயம்பின. இவ்வாற்றான் சொல்லிலக்கணமே சிறப்புடையது எனத் தெரியலாம். இதுபற்றியே இவ்வதிகாரத்திற்கு உரைகளும் பல வாயின போலும் எனக் கருத இடந்தருகின்றது. |