சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

61

அவை     சினையின் தொழிலை முதற் கேற்றிக் கூறலும், பண்பின்
தொழிலை  பண்படைந்த  பொருட்கு  ஏற்றிக்  கூறதலும்,  தொழிலின்
வினையைத் தொழிலடைந்த பொருட்கு ஏற்றிக் கூறலும், இடத்து  நிகழ்
பொருளின்    தொழிலை    இடத்திற்கு    ஏற்றிக்   கூறலும்   என
இன்னோரன்ன பலவகைப்படும்.

(எ - டு.) சினைவினை முதற்கு ஏற்றிக் கூறல் சாத்தன் கண்நல்லன்,
இவ்யானை கோடு கூரிது என்பன போல்வன.

பண்பின் வினை  பண்படைந்த பொருட்டு ஏற்றிக் கூறல் இம்மணி
நிறம் நன்று, இம்மலர் நாற்றம் பெரிது என்பன.

தொழிலின் வினையைத் தொழிலடைந்த பொருட்டு  ஏற்றிக் கூறல்:
இக்குதிரை நடை நன்று, இத்தேர் செலவு கடிது என்பன.

இடத்து     நிகழ் பொருளின் தொழில் இடத்திற்கு ஏற்றிக் கூறல்
இவ்வாறு  நீர்  ஒழுகும், இவ்வயல் நெல் விளையும் என்பன. பிறவும்
வந்தவழிக் கண்டு கொள்க.

இன்னும்     அவ்விலேசானே எழுவாய்க்குப் பயனிலையாய் வந்த
பெயர்,  தானும்  எழுவாயாய்ப்  பயனிலை  கொண்டும், உருபேற்றும்
வருவனவுங் கொள்ளப்படும்.

(எ - டு.)   இறைவன்   அருளல்   எம்  உயிர் காக்கும், எனவும்,
இறைவன்  அருளலின்  யாம்  உயிர் வாழ்தும் எனவும் வரும். இஃது
ஆறாவதாம் எனினும் நோக்கு அஃதன்று என்பது.

பயனிலை முன்னும்  பின்னும்  நிற்றலும்,  பயனிலை  சில  சொல்
இடை கிடப்ப வருதலும் ஈண்டே கொள்ளப்படும்.

ஆ செல்க,  செல்க  ஆ  என  முன்னும்  பின்னும் நின்றது. ஆ
சாத்தனுய்ப்ப,      எருமைத்      தன்கன்றினோடு      மருங்காக,
தானிவ்வூரினின்றும்   அவ்வூரின்கட்   செல்லும்,  இஃதிடை  கிடந்த
சொல்லொடு வந்தவாறு.

இறைவன்     அருளல்  என்பது  எழுவாயொடு  பொருளியைபு
இன்றாயினும்,  வினைமுதற்  பொருள்  தோன்ற வந்தமையின் பெயர்
கொளவருதல் என வழங்கும் என்பது.

1‘‘சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே”

எனவும்,

2“கோஓல் செம்மையிற் சான்றோர் பல்கி”

எனவும்     வரும்     பண்புகளும்    பொருளியைபில    எனினும்
ஒருவாற்றான் பெயர் கொள்ள வந்ததன் மேற்பட்டு அடங்கும் என்பது.

எழுவாய் வேற்றுமையின் விகற்பங்கள் எல்லாம் வழக்கினகத்தறிந்து
இவ்விலேசினகத்து அமைத்துக்கொள்க.                        (5)


1 நற்றிணை 50. 2 புறம் 117 : 6