சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

67

இடனும்  என  இன்னோரன்னவும்  அத்  தொழிலுறு மாலோவெனின்,
அவை  உறும் எனினும் பெரும்பான்மையும் இதன்  கண்ணது என்பது
கருத்து.

வினை     என்னாது வினைக்குறிப்பு என்றது என்னையோ எனின்,
மரங்குறைத்தான்  என்புழிக்  குறைக்கப்படுதல்  என்பது  போலாகாது,
குழையையுடையவன்        என்புழிக்       குழையினுடைமைப்பாடு
செயப்படுபொருளாய் விளங்கி நில்லாமையின் வேறு கூறினார் என்பது.

அச் செயப்படு பொருள்தான், இல்லதொன்றாய் உண்டாக்கப்டுவதும்,
உள்ளதொன்றாய்  உடல் வேறுபடுக்கப்படுவதும், உள்ளதொன்றாய் ஒரு
தொழில் உறுவிக்கப்படுவதும், உள்ளதொன்றாய் ஒன்றனாலுறப்படுவதும்
எனப் பலவகையாம்.

இல்லதொன்று உண்டாக்கல் - எயிலையிழைத்தான் என்பது.

உள்ளதொன்றனை உடல்  வேறாக்கல்  - மரத்தைக்  குறைத்தான்
என்பது.

உள்ள தொன்று ஓர் தொழிலுறுவித்தல் - கிளியை யோப்பும் என்பது.

உள்ளதொன்றனை யொன்றுறுதல்- நூல் நூற்றான் என்பது. பிறவும்
அன்ன.

இன்னும்   இச் செயப்படுபொருள்தான் தன்கண்ணும் ஓர் தொழில்
நிகழ்ந்து   செயப்படுபொருளாவனவும்,  தன்கண்  தொழில்  நிகழாது
செயப்படுபொருளாவனவும் என இருவகைய.

தன்கண்ணும்    தொழில்  நிகழ்ந்தது  -  அறுத்தல்,  குறைத்தல்
என்பனவாம்;   அறுத்தல்,  குறைத்தல்  மரமுதலாய  தன்  கண்ணும்
நிகழ்ந்தன ஆதலின்.

தன் கண் நிகழாதது, வாய்க்காலைச்  சாரும்  என்றாற்  போல்வன.
பிறவும் அன்ன.

இன்னும் இரண்டாவதன் செயப்படுபொருள் தெரிநிலைச் செயப்படு
பொருளும், தெரியாநிலைச் செயப்படுபொருளும் என இருவகைத்தாம்.

தெரிநிலை மரத்தைக் குறைத்தான் என்பது.

தெரியாநிலை சாத்தனால் மரம் குறைக்கப்பட்டது என்பது.

மற்றிஃது     எழுவாயன்றோ எனின், சொல்நிலை அன்னதாயினும்
சாத்தன்  என  நின்ற  உருபினை  நோக்கப்  பொருணிலை அன்னது
அன்று என உணர்க.

சோற்றை    அட்டான் எனச் செய்வான் கருத்துள்வழிச் செயப்படு
பொருளாதலும்   சோற்றைக்   குழைத்தான்   எனக்  கருத்தில்வழிச்
செயப்படுபொருளாதலும் என இருவகைய.