ஒன்றனோடொன்றியைந்து ஒருவினையாதல் என்னும் பொருண்மை, ஒன்றனோடொன்றியைந்து வேறுவினையாதல் என்னும் பொருண்மை, ஒன்றனோடொன்றியைந்து ஒப்பல்லா வொப்பினையுரைத்தல் என்னும் பொரு்ண்மை, இத்தன்மையான் என்னும் பொருண்மை, ஏதுப்பொருண்மை என்னும் இவையும், இப்பெற்றியானே இதனிடத்து வருகின்ற அத்தன்மையான பிற பொருள்களும் அம்மூன்றாவதன் கூற்றன என்று சொல்லுவர் புலவர் (எ - று.) மூன்றாவதற்கு உருபு ஒடுவும், ஆனும் என இருவகைத்து. ஆன் என்பது எடுத்தோதிற்றிலரெனினும் “அதனினியறல் அதற்றகு கிளவி” என ஓதிய வாய்ப்பாட்டான் பெறுதும் என்பது. வினைமுதல் கருவி என்றோதிய பொருண்மை இவ்விரண்டுருபிற்கும் ஒக்கும் என்பது. (எ - டு.) வினைமுதல் - கொடியோடு துவக்குண்டான். நாயாற் கோட்பட்டான். கருவி- ஊசியோடு குயின்ற தூசும் பட்டும், வேலானெறிந்தான் எனவரும். அதனினியறல் - தச்சன் செய்த சிறுமா வையம் என்பது. அதற்றகு கிளவி - வாயாற்றக்கது வாய்ச்சி என்பது. அதன் வினைப்படுதல் - நாயாற்கோட்பட்டான், சாத்தனான் முடியு மிக்கருமம் என்பன. அதனினாதல் - வாணிகத்தானாயினான் என்பது. அதனிற் கோடல் - காணத்தாற்கொணட் அரிசி என்பது. அதனொடு மயங்கல் - எண்ணொடுவிராய அரிசி என்பது. அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி - சாத்தனான் வந்தான் என்பது. அதனோடியைந்த வேறுவினைக் கிளவி - மலையொடு பொருதமால் யானை காவொடறக்குளந் தொட்டான் என்பன. வேறு வினை என்பது ஒன்றன்கண்ணே வினையாதல். அதனோடியைந்த வொப்ப லொப்புரை - நூலொடு நார் இயைந்தது போலும், முத்தொடு பவழம் கோத்தது போலும் என்பன. இன்னான் என்பது, இத்தன்மையான் என ஒருவன் பெற்றி கூறல்; அஃது கண்ணாற் கொத்தை, காலான் முடவன் என்பன. ஏது - முயற்சியிற் பிறத்தலான் இசை நிலையாது என்பது. |