அதனினியறல் முதலாக அதனிற்கோடல் ஈறாக ஓதிய பொருண்மை எல்லாம் சூத்திரத்துள் ஆனுருபின் சுவடுபட ஓதினமையின் பெரும்பான்மை ஆனுருபிற்கே உரியவாம். சிறுபான்மை ஒடுவுருபிற்கும் வருவன உளவேல் கொள்க. இவற்றுள், அதனினியறல், அதன்வினைப்படுதல் என்றோதிய இரண்டும் வினைமுதற் பாகுபாடு. அதனிற் கோடல், கருவியின் பாகுபாடு போலும். அதற்றகு கிளவியும் அதனினாதலும் ஏதுவின் பாகுபாடு. அதனொடு மயங்கல் முதலாக அதனோடியைந்த ஒப்பலொப்புரை ஈறாக ஓதின எல்லாம், ஒடுவுருபு கொடுத்தோதினமையின் பெரும்பான்மையும் ஒடு உருபிற்கே உரிய; சிறுபான்மை ஆனுருபிற்கும் வருவன உள வேற்கொள்க. இன்னான் என்னும் பொருண்மையும், ஏது என்னும் பொருண்மையும் ஓருருபின் எடுத்தோதாமையின் வழக்கிற்கேற்றவாறு கொள்ளப்படும். முன்னும் ஏதுவின் பாகுபாடோதிவைத்துப் பின்னும் ஏது எனவோதியது அவ்வாறொழிய வருவனவற்றைக் கருதிப் போலும். அவ்வேது காரக ஏதுவும் ஞாபக ஏதுவும் என இருவகைத்து. முயற்சியிற் பிறத்தல் காரகம்; பிறத்தலான் இசைநிலையாது என்பது ஞாபகம். அஞ்ஞாபகத்தைப் போலும் ஈண்டு ஏது என ஓதியது. அன்ன பிறவும் என்றது சூத்திரத்துள் எடுத்தோதின பாகுபாட்டினொழிந்தனவும். பிற பொருட்பாகுபாடுகளும் கருதிப் போலும். அவையெல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க. (12,13) நான்காம் வேற்றுமை |