4. கல்லாடர் (1) இப்பெயருடையார் மூவர் உளர். முன்னவர் :- இவர்களுள் முன்னவர் கடைச்சங்க காலத்தினர் இவரைப் பற்றிய வரலாறு ஒன்றும் தெரிந்திலது. இவர் பாடிய செய்யுட்கள் வரலாற்றுக் குறிப்புடையன. இவர் இயற்றிய பாடல்கள் அகநானூற்றில் ஏழும், குறுந்தொகையில் இரண்டும், புறநானூற்றில் ஐந்தும், திருவள்ளுவ மாலையில் ஒன்றுமாக மொத்தம் பதினாறு பாடல்களாகும். “இருடிகள் அல்லா ஏனையோராகிய மனத்தது பாடவும், சாவவும் கெடவும் பாடல் தரும் கபில பரண கல்லாட மாமூலப் பெருந் தலைச் சாத்தர் இத்தொடக்கத்தோராலும், பெருஞ்சித்தரனார் தொடக்கத்தோராலும் ஆரிடச்செய்யுள் போல மிகவும் குறையவும் பாடப்படுவன எனக் கொள்க” எனவரும் யாப்பருங்கல விருத்தி (93 நூற்பா வுரை) யில் குறிக்கப்படும் கல்லாடர் இவரே யாவர். அடுத்தவர் :- இவர் கல்லாடம் என்னும் அரிய அகப்பொருள் நூலைச் செய்தவர். இந்நூல் அகப்பொருள்துறை அமைந்த நூறு அகவற் பாக்களால் ஆகியது. இதனைக் “கல்லாடர் செய்பனுவல் கல்லாட நூறு நூல்’’ என்னும் வாக்காலும் நன்கறியலாம். இவர் இந்நூலின் தொடக்கத்தே செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய செந்திற் பெருமானையும், விநாயகப் பெருமானையும் வழிபட்டுத் தொடங்கு தலானும், இந்நூலானும் இவர் சைவர் என்பதை நன்கறியலாம். இவர் துறுவறத்தவராவர். இதனை, “வாய்ந்தபொருட் கொருபொருளாய்க் கலைவாணிக் கருள்கொழிக்கும் அன்பாய்ப் பாரின் ஆய்ந்தமுது தமிழ்வடித்துத் கல்லாட மெனஒருநூல் அருளி யிட்டார் தேய்ந்தமதிச் சடைப்பரமர் கருணைபெறச் சங்கமுது செல்வர் வாழ்த்தக் காய்ந்தபுலன் அடக்கியுயர் பெருஞானம் பழுத்தருள்கல் லாட னாரே’’ என்னும் பாடலால் நன்கறியலாம். பதினோராம் திருமுறையில் உள்ள “கண்ணப்பதேவர் திருமறம்’’ என்னும் நூலை அருளியவரும் “சமயக் கணக்கர் மதிவழி கூறா(து) உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன்’’ (கல்-15) எனத் திருவள்ளுவப் பெருந்தகையைப் பாராட்டியவரும் இவரே யாவர். இவரே தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் என் |