சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

73

(இ - ள்.) ஐந்தாம்    முறைமைக்கண்ணதாகிய    இன்  என்னும்
பெயரையுடைய   வேற்றுமைச்சொல்  இப்பொருளின்  இத்தன்மைத்து
இப்பொருள்   என   வரூஉம்   பொருரூஉப்பொளினைத்   தனக்குப்
பொருளாக   உடைத்து;   அது  வருமாற்றை  விரிப்பின்,  வண்ணம்
முதலாகப்       பற்றுவிடுதல்        ஈறாகச்       சொல்லப்பட்ட
இப்பொருண்மைக்களும்  பிற  பொருண்மைகளும் அவ்வைந்தாவதின்
கூற்றன என்று சொல்வார் புலவர், (எ - று.)

இனி  ஐந்தாவது பொரூஉப்பொருளும், நீக்கப்பொருளும், எல்லைப்
பொருளும்,    ஏதுப்பொருளும்    என   நால்வகைய.    அவற்றுள்,
பொருரூஉப்   பொருள் சிறப்புடைமையின் முன்னெடுத்து ஓதப்பட்டது.
பொரூஉ   என்பது  ஒன்றை  ஒன்றின்  மிகுத்துக்  கூறல்.  இதனின்
ஒழிவாகிய   உவமமும்   இரட்டுறமொழிதல்  என்னும்  ஞாபகத்தான்
ஈண்டே  கொள்ளப்படும்.  நீக்கம்  உதாரணப்  பகுதி கூறுகின்றவழிக்
கொள்ள  வைத்தார்  என்பது.  எல்லையும்  ஏதுவும் அன்ன பிறவால்
கொள்ள வைத்தார் என்பது.

(எ - டு.) காக்கையிற்கரிது களம்பழம் என்றாற் போல்வன. இதனின்
என்பது  காக்கையின்  என்பது.  இற்று என்பது   கரிது என்பது. இது
என்பது களம்பழம் என்பது. என்றது காக்கையினுங் கரியது  களம்பழம்
என்று    மிகுத்துக்    கூறியவாறாயிற்று.   உவமத்திற்கும்   இதுவே
உதாரணமாம். காக்கைப் போலச் கரிது களம்பழம் என்றவாறாம்.

இனி வண்ணமென்பது  ஐந்து   வகைப்படும்.  கருமை  முதலியன
காக்கையிற் கரிது களம்பழம் என்றாற் போல்வன.

வடிவு  என்பது முப்பத்திரண்டு வகைத்து. அவை வட்டஞ், சதுரம்
கோணம் முதலியன. இதனின் வட்டமிது என்பது.

அளவு - நெடுமை,  குறுமை,  நீளம்  எனப்  பலவாம்.  இதனின்
நெடிது இது என்பது.

சுவை - அறுவகைப்படும்.  அவை  கைப்பு  முதலியன.  இதனின்
தீவிது இது என்பது.

வெம்மை - இதனின் வெய்யது இது என்பது.

அச்சம் - கள்ளரின் அஞ்சும் என்பது. இஃது ஏதுவின் கண் வரும்.

நன்மை - இதனின் நன்று இது என்பது.

தீமை  - இதனின் தீது இது என்பது.

சிறுமை - இதனின் சிறிது இது என்பது.