பெருமை - இதனிற் பெரிது இது என்பது. வன்மை - இதனின் வலிது இது என்பது. மென்மை - இதனின் மெலிது இது என்பது. கடுமை - இதனின் கடிது இது என்பது. முதுமை - இதனின் மூத்தது இது என்பது. இளமை - இவனின் இளையோன் இவன் என்பது. சிறத்தல் - இவனிற் சிறந்தவன் இவன், இதனிற் சிறந்தது இது என்பன. இழித்தல் - இவனின் இழிந்தவன் இவன், இதனின் இழிந்தது இது என்பன. புதுமை - இவனிற் புதியன் இவன், இதனிற் புதிது இது என்பன. பழமை - இவனிற் பழையன் இவன், இதனிற் பழையது இது என்பன. ஆக்கம் - இவனின் ஆயினான், வாணிகத்தின் ஆயினான் இவன் என்பன. இது ஏதுப்பொருட்கண்ணும் வரும். இன்மை - இவனின் இலன் இவன் என்பது. உடைமை - இவனின் உடையன் இவன் என்பது. நாற்றம் - இதனின் நாறும் இது என்பது. இவையெல்லாம் பொரூஉப் பொருளாம். தீர்தல் - ஊரிற்றீர்ந்தான் என்பது. பன்மை - இவரிற் சிலர் இவர், இதனிற் பல இவை என்பன சின்மை - இவரிற் சிலர் இவர், இதனிற் சில இவை என்பன. இவையும் பொரூஉப் பொருளவாம். பற்று விடுதல் - ஊரிற் பற்றுவிட்டான், காமத்திற் பற்றுவிட்டான் என்பன. இவை நீக்கம். மருவூரின் மேற்கு, கருவூரின் கிழக்கு என்பன எல்லைப் பொருளவாம். முயற்சியிற் பிறத்தலின் இசை நிலையாகாது என்பது ஏதுப் பொருளது. அன்ன பிறவும் என்றது எடுத்தோதின் பொரூஉப் பொருளின் பாகுபாட்டினும் நீக்கப்பொருளின் பாகுபாட்டினும், ஒழிந்தவற்றிற்கும், பிறபொருட் பாகுபாட்டிற்கும் புறனடை என உணர்க. (16,17) |