கருவி - சாத்தனது வாள் : இதுபிறிதின் கிழமை. துணை - சாத்தனது துணை; இதுவும் அது. கலம் - சாத்தனது கலம்; கலம் என்பதனை யொற்றிக் கலத்தின் மேற் கொள்க. பிறகலத்தின்மேற் கொள்ளாமைக் காரணம் என்னை எனின், இஃதொரு பொருள் இருவற் குடைமையாக நிற்கும், வேறுபட்டதாகலின் என்க. இஃது உரையிற் கோடல். இதுவும் அது முதல் - சாத்தனது முதல் இத்தோட்டம் என ஓர்க. இதுவும் ஓர் உடைமை வேறுபாடு எனக் கொள்க. இதுவும் அது. ஒருவழி யுறுப்பு - யானையது கோடு, உறுப்பு என்னாது ஒருவழியுறுப்பு என்றது ஓருறுப்பினையுடைமையாகக் கருதாது பலவற்றையுங் கருதி உரிமையாகாத பொருடானாம் என்பது போலும். இது தற்கிழமையுள் உறுப்பின் தற்கிழமை. குழுவு - எட்குப்பை, படைக்குழாம் என்பன. இவை தற்கிழமையுள் ஒன்று பலகுழீஇயதூஉம் வேறுபல குழீஇயதூஉம் ஆம். குழு என்பது உடல் நோக்கிற்று. தெரிந்துமொழிச் செய்தி - கபிலரது பாட்டு: இதுவும் பாரியது பாட்டு எனவும் நிற்றலின் இரு பொருட் குரிமையாம். கபிலரது என்புழி மெய்திரிந்தாகியதன் பாற்படும், பாரியது என நிற்புழிப் பிறிதின் கிழமையாம். நிலை - பெண்ணாகத்துப் பெருஞ்சங்கரனாரது நிலை. இஃது ஒன்றிய தற்கிழமை. வாழ்ச்சி - சாத்தனது வாழ்ச்சி ; இது வாழ்தல் என்னும் தொழில் கருதினவழித் தற்கிழமை. வாழும் இடம் கருதியவழிப் பிறிதின் கிழமையாம். திரிந்து வேறு படுவன - எட்சாந்து, கோட்டு நூறு என்பன. சாத்தனது சொல் என்பதும் பிறவும் ஒரு பொருள் முழுவதூஉம் திரியாதன. பரணரது பாட்டியல் என்றாற் போல வருவன எல்லாம் உதாரண வாய்பாடாக எடுத்தோதாது திரிந்து வேறுபடும் எனப் பொதுப்பட ஒரு பொருண்மையாக எடுத்தோதினமையிற் கொள்ளப்படும். பிறவும் என்றதனால் சாத்தனது வனப்பு, சாத்தனது ஆண்மை, சாத்தனது நடை, சாத்தனது புத்தகம் எனவரும், பிறவும் அன்ன. (18,19) |