என் - எனின், நிறுத்த முறையானே ஏழாம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஏழாம் எண்ணுமுறைக் கண்ணதாகிய கண் என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல்வினை செய்யிடமும், நிலமும், காலமுமாகிய மூன்று பொருட்கண்ணும் வரும். அதன் உருபு வரும் பாகுபாட்டைச் சொல்லின் கண் என்னும் உருபு முதலாய்ப் புடை என்னும் உருபு ஈறாக ஓதப்பட்ட உருபுகளும், இடையே தே, வகை என ஓதிய திசைக்கூற்றுப் பொருண்மையும், பின்னரும் முன் என்னும் உருபு முதலாக இடம் என்னும் உருபு ஈறாக எடுத்தோதப்பட்ட உருபுகளும் அத்தன்மைய பிற உருபுகளும் அவ்வேழாவதன் கூற்றன, (எ - று.) வினைசெய்யிடம் - வினைசெய்யா நிற்றலாகிய இடம். வினைசெய் நிலம் - ஒரு தொழில் நிகழாது வரையறையுடையதோர் இடம். காலம் என்பது ஒரு தொழில் நிகழ்தற்கு இடமாய் வரையறைப்பட்டு நிற்பது. இம் மூன்றன் கண்ணும் ஏழாவது வருமிடத்து இடமும் இடத்துநிகழ் பொருளும் வேறுபட வருவனவும் என இருவகைய. (எ - டு.) வினைசெய்யிடம் - தட்டுப்புடையுள் வந்தான், தட்டுப்புடையுள் வலியுண்டு. நிலம் - குன்றத்துக் கூகை, குன்றத்துக்கண் குவடு, ஆகாயத்துக்கண் பருந்த.
1 இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர். |