சொல்லதிகாரம் - இடையியல்16

என்று, என, ஒடு : என்பன எண்ணுப்  பொருளில்  வரும்போது
சொற்றொறும்  வருக  என்னும்   நியதியில்லை.  ஏதேனும்   ஒரு
சொல்லிடத்து  நின்று பொருள் கொள்ளும்  போது  சொற்றோறும்
கொள்ளுமாறு  அமைதல்  உண்டு. ‘வினை  பகை  என்றிரண்டின்
எச்சம்’  (குறள். 674) என்பதில் ‘என்று’ என்பது  பகையில் நின்று
வினையில்    இல்லாதிருந்தாலும்   பொருள்   கொள்ளும்போது
‘வினையென்று பகையென்று’ எனக் கொள்ளப்படுதல் காணலாம்.
(46)

புறனடை

பெயரிலும்    வினையிலும் சார்ந்து இடைச்சொற்கள் வந்து பொருள்
தருமாறு    கூறப்பட்டிருந்தாலும்   கூறியவற்றுக்கு   மாறாக   வரும்
பொருள்களும்  இடமறிந்து  கொள்ளுதல்  வேண்டும்.  ‘மன்’ என்பது
அசைநிலையில்  வரும்  என்பது  கூறப்படவில்லை;  ஆயினும் ‘அது
மற்கொண்கன்தேரே’  என  வந்தவிடத்து  ‘மன்’  அசை நிலையாயது
காண்க. இப்படியேபிறவும். (47)

சொல்லப்பட்ட           இடைச்            சொற்களேயன்றிச்
சொல்லப்படாதனவுளவேல்    அவையும்    இடமறிந்து   கொள்ளல்
வேண்டும்.   ‘ஆம்’   என்பது   அசைநிலையில்   வரும்   என்பது
கூறப்படவில்லை.  ஆனால்,  ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்னும்
குறளில்  (978)  ‘ஆம்’  என்பது  அசை  நிலையில்  வந்தது காண்க.
பிறவும் அன்ன. (48)