நச். இதுவுமது. இ-ள் : மற்றையது என்னும் கிளவி தானே - மற்றையது எனப் பெயர்க்கு முதல்நிலையாய் வரும் மற்றை என்னும் ஐகாரவீற்று இடைச்சொல், சுட்டுநிலை ஒழிய இனங் குறித்தன்றே - ஒருவன் முன்னர்க் கருதப்பட்டபொருள் ஒழிய அதன் இனப் பொருளைக் கருதி நிற்கும். எ-று. உ-ம் : ஆடை கொணர்ந்தவழி அவ்வாடைவேண்டாதார் மற்றையது கொண்டு வா என்றால், அதற்கு இனமாகிய பிற ஆடை குறித்து நிற்கும். இனிச் சிறுபான்மை ‘மற்றையாடை’ எனத் தானேயும் வரும். அஃது அவன் என்னுந்தொடக்கத்தன வற்றிற்கு மற்றை யஃது மற்றையவன் என அவ்விடைச் சொல் முதனிலையாய் வருதலின், மற்றை என இடைச்சொல்லைப் பிரித்தோதாது, மற்றையது என ஒன்றாக ஓதினார். வெள். இது மற்றையது என்னும் இடைச் சொல்லின் இயல்பு கூறுகின்றது. இ-ள் ; மற்றையது எனப்பெயர்க்கு முதனிலையாய் வரும் மற்றை என்னும் ஐகாரவீற்று இடைச்சொல், சுட்டப்பட்ட தனை ஒழித்து அதன் இனங்குறித்து நிற்கும், எ-று. ஒருவர் ஆடையொன்றைக் கொணர்ந்தவழி, அவ்வாடையினை விரும்பாதவன் ‘மற்றையது கொணா’ என்பன். அந்நிலையில் மற்றையது என்னும் சொல் அச்சுட்டிய ஆடையை யொழித்து அதற்கினமாகிய ஆடையினைக் குறித்து நிற்றல் காண்க. மற்றை என்னும் ஐகார வீற்றிடைச்சொல் பெரும்பாலும் மற்றையது, மற்றையவை, மற்றையவன் என்றாங்கு முதனிலையாய் நின்றல்லது பொருள் விளக்காமையின் ‘மாற்றையது’ என விகுதியோடு புணர்த்துக் கூறினார். சிறுபான்மை ‘மற்றையாடை’ என விகுதியின்றித் தானேயும் வரும். பால. கருத்து :- மற்றை’ என்னும் இடைச்சொல்லின் பொருண்மை கூறுகின்றது. |