பொருள் :- மற்றை என்னும் இடைச்சொல் யாதானும் ஒரு பொருளைச் சுட்டும் நிலைமை தவிர்ந்து எடுத்த ஒரு பொருளிற்கினமான பொருளைக்குறித்து வரும். மற்றை என்னும் இடைச்சொல் பெரும்பான்மையும் யாதானும் ஒரு பால் பற்றிய சுட்டுப் பெயரோடன்றி வாரா தென்பதறிவித்தற்கு ‘மற்றையது’ எனச் சுட்டுப் பெயரோடு ஒருங்கு ஓதினார் என்க. எ.டு :- இவ் ஆடை கொள்க என்றவழி மற்றையது கொள்வேன் எனின் அச்சுட்டு பிறிதொரு ஆடையையே சுட்டி நிற்குமாறு காண்க. இவ்வீரன் தக்கானோ என்றவழி மற்றையவன் தக்கான் எனின் அச்சுட்டுப்பிறனொரு வீரனையே சுட்டுதலும், பரிமறவர் பொருவரோ என்புழி மற்றையவர் பொருவர் எனின், கரிமறவர், தேர் மறவர் ஆகியோரையே சுட்டுதலும் கண்டு கொள்க. சிறுபான்மை மற்றை ஆடைகொள்வேன், மற்றைவீரன் தக்கான், மற்றை மறவர் பொருவர் எனப் பொருட் பெயரோடும் வரும். எவ்வாறு வரினும் இனக்குறிப்பைத் தருவது “மற்றை” என்னும் இடைச் சொல்லேயாதல் அறிக. என என்பது செயவெனச்சப் போலியாய் நிற்குமாறு போல, மற்றை என்பது பெயரெச்சப் போலியாய் நிற்குமோர் இடைச் சொல்லாதலின் மற்று என்பதன் விகாரமன்று என அறிக. மற்று என்னும் இடைச்சொல் வினையொடு முடியும் இயல்பின தாதலையும் அறிக. மன்ற |