முத்து. ஒ. 12. மன்றக் கிளவி தெளிவை விளக்கும். இளம் வ-று : 1 ‘கார் மன்ற என்பவள் கண்ணுள்ளே காதலர் தேர் மன்றத் தோன்றிய’ என்றக்கால், தெளிந்தாள் அவள் என்றவாறு. சேனா. இ-ள் : மன்ற என்னுஞ் சொல் தெளிவுப்பொருண்மையை யுணர்த்தும், எ-று. உ-ம் :2 ’கடவு ளாயினு மாக, மடவை மன்ற வாழிய முருகே’ (நற்.34) என வரும். மடவையே என்றவாறாம். தெய். இதுவுமது இ-ள் : மன்ற என்னுஞ் சொல் தேற்றப் பொருண்மையை யுணர்த்தும் என்றவாறு. ‘கடவுளாயினுமாக, மடவை மன்ற வாழிய முருகே’ என்ற வழிக் கடவுளாயினும் மடவை எனத் தேற்றப் பொருண்மை காட்டிற்று. நச். இதுவுமது. இ-ள் : மன்ற என்கிளவி தேற்றம் செய்யும்-மன்ற என்னுஞ் சொல தெளிவுப் பொருண்மை யுணர்த்தும், எ-று. உ-ம் : ‘மடவை மன்ற வாழிய முருகே’ (நற். 34) என மன்ற அறியாமையையே தெளிவித்தது.
1. பொருள் : கார்காலமே என உறுதியாகத் தெளிந்தவளின் கண்ணுள்ளே காதலரின் தேர் தெளிவாகத் தோன்றிய............ 2. பொருள் : முருகனே! நீ கடவுளாக இருப்பினும் இருக்க, உறுதியாக நீ ஒன்றும் அறியாதவனேயாவாய். |