உ-ம் : ‘முரசுகெழுதாயத்தரசோ தஞ்சம்’ (புறம். 73) என்பது எளிது என்பது குறித்து நின்றது. நச். இதுவுமது இ-ள் : தஞ்சக்கிளவி எண்மைப் பொருட்டே - தஞ்சம் என்னுஞ்சொல் எளிது என்னும் பொருண்மையை யுடைத்து, எ-று. உ-ம் ; ‘முரசு கெழுதாயத்து அரசோ தஞ்சம்’ எனத் தஞ்சம் அரசு கொடுத்தல் எளிது என நின்றது. இசரயேல் இச் சொல் பெயர்ச் சொல்லாக அடைக்கலப் பொருளிலும் சங்க இலக்கியத்தில் வந்துளது. தஞ்சம் அருளாய் நீயே (ஐங். 50) - அடைக்கலம் பால. கருத்து : தஞ்சம் என்னும் இடைச்சொல்லின் பொருண்மை கூறுகின்றது. பொருள் : தஞ்சம் என்னும் இடைச்சொல் எண்மைப் பொருள் குறித்து வரும். எ,டு : ஈயென இரக்குவராயின் சீருடை முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம் (புறம் - 73) அரசைப் பெறுவது எளிது என்பது பொருள். அடைக்கலம் என்னும் பொருள்தரும் ‘தஞ்சம்’ என்னும் பெயர்ச்சொல் வேறு, இவ்இடைச்சொல் வேறு. தஞ்சு என்பது இதன் முதனிலை. தஞ்சாவூர் (தஞ்சு ஆவூர்- தஞ்சாவூர்) என்பது இதனடியாகப் பிறந்த பெயராம். வளங்காரணமாக வாழ்தற்கு எண்மையான ஊர் என்பது கருத்து. தன் செய்யூர் என்பது தஞ்சாவூரென மருவிற்றென்பார் சிலர். தன்செய்யூர் என்பது மருவின் தஞ்சையூர் - தஞ்சியூர் என மருவுதலன்றி (ஆவூர்) தஞ்சாவூர் என மருவுதல் மொழி மரபாகாமையறிக. |