சூத்திரத்தில் ரகரத்தை லகரமாகக் கொண்ட பிறழ்ச்சியே இம்மாற்றத்திற்குக் காரணம் என்பதும் காலஞ்சென்ற இலக்கணக் கடலனாராகிய அரசஞ் சண்முகனார் ஆராய்ந்து கண்ட உண்மையாகும். “வெண்மதியும் பாம்பும் உடனேவைத்தீர் கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே” (6-45 :3) எனத் திருநாவுக்கரசரும், “எல்லே யிளங்கிளியே இன்னும் உறங்குதியோ” (திருப்பாவை.15) “எல்லே ஈதென்ன இளமை எம்மனைமார் காணில்ஒட்டார்” (நாச்சியார் திருமொழி. 3.3) என ஆண்டாளும் அருளிய திருப்பாடல்களில் எல்லே என்னும் இடைச்சொல் இரங்குதற் பொருள்பட வருதல் இங்கு நோக்கத் தகுவதாகும். ஆதி. எல் - விளக்கமான, இலங்கு - ஒளிரும் எனப் பொருள் தந்து நிற்கும். எல்வளையார் - ஒளிரும் வளையுடையார் எல்லம்மன் - ஒளிரும் தெய்வம் எல் தனிப்பொருள் உடையது ஆதலின் அஃது உரிச்சொல் ஆகும். சேனாவரையரும் உரிச்சொல் என்றுகூறி “ஆசிரியர் இடைச்சொல் என்றமையால் இடைச்சொல் என்பார்” என்பர். மற்றொரு பேராசிரியர் அதனை இடைச்சொல்லாக்க ‘எல்லே இரக்கம்’ எனத் திருத்தி விட்டார். சிவ. தவறிக் கீழேவிழும் ஒருவனை ‘எல்லே’ என்று தாங்குவான் கூறுதல் உண்டு. அங்கு அது அவன் கொண்ட இரக்கத்தை யுணர்த்தும். இவ்வழக்குத் திருநெல்வேலி மாவட்டப் பகுதியில் இன்றும் உண்டு. அதனால் ‘எல்லே இரக்கம்’ என்னும் பாடமும் கொள்ளலாம். ‘கொல்லே ஐயம்’ என்றது போல ‘எல்லே இலக்கம்’ என்றார் ஆசிரியர் எனக் கொண்டு உரையாளர் யாவரும் ‘எல்’ என்பது கொண்டனர். இரண்டுமே பொருந் |