தும். இனி எல்லே என்பது விளிப்பொருளிலும் வருதல் உண்டு. ‘எல்லே! இளங்கிளியே’ என ஆண்டாள் பாடலும் கூறும். இதனை எல்லா என்பதன் திரிபாகக் கொள்வதும் உண்டு. இங்குக் கூறப்பட்ட ‘எல்லே’ என்பது ‘எல்’ என்பதாயினும் எல்லே என்னும் ஒரு சொல்லாயினும் இடைச்சொல் என்பதில் தவறில்லை. ஏன் எனின் இரண்டுமே உருபேற்றல் இல்லை : வினைச்சொற்குரிய காலம் காட்டுதலும் இல்லை. பி.கு. “உரையாசிரியர் தரும் உதாரணங்களிலெல்லாம் ‘எல்’ என்பது பெயர்ச்சொல்லுக்கு அடையாகவே அமைந்திருத்தலின் சேனாவரையர் கருத்து (எல் உரிச்சொல் என்பது) சரியாகவே படுகிறது. உரிச்சொற்கள் பெரும்பான்மையும் பெயருக்கோ வினைக்கோ அடையாய் அமைகின்றன. ‘எல்’ பெயருக்கு அடையாய் அமைந்திருப்பதால் அதனை இடைச் சொல்லாகக் கருதுவது பொருத்தமாகத் தோன்றவில்லை” - என்பர் குமாரசாமி ராஜா.1 பால. கருத்து : ‘எல்’ என்னும் இடைச் சொற்பொருண்மை கூறுகின்றது. பொருள் : ‘எல்’ என்னும் இடைச்சொல் அசைந்திலங்குதல் பொருட்டாகும். எ-டு : எல்வளை மகளிர் (புறம். 24) எனவரும். அசை தலையுடைய “வளை” யணிந்த மகளிர் என்பது பொருள். இலக்கம் என்பது இலங்குதல், விளங்குதல், துலங்குதல் என்னும் வினைப் பண்பு பற்றி வரும். ஈண்டு அஃது பண்பு குறியாது தொழில் குறிப்புணர்த்தி நிற்றலின் இடைச்சொல்லாயிற்று என்க. எல் என்பது ஞாயிற்றினைக் குறிக்குங்கால் பெயராயும், எல்லினன் பெரிது - எல்லிற்றுப்போது என ஒளிர்தலைக் குறிக்குங்கால் வினையாயும் எல்லொளிமதியம் எனப் பண்பினைக் குறிக்குங்கால் உரிச்சொல்லாயும் நிற்கும் என அறிக.
1. இடைச்சொல் பற்றித் தொல்காப்பியர், தொல்காப்பிய மொழியியல் பக். 237. |