சொல்லதிகாரம் - இடையியல்105

வ-று : அரசனார் வந்தார், பார்ப்பார் வந்தார் என வரும்.

இனி  விலங்கின்  மேலும் யானையார்  வந்தார்,   நாயார்  வந்தார்
எனவரும்.

1 ‘பெயர்முன் ஆரைக்கிளவி பலர்க்குரி  யெழுத்தின்   வினையொடு
முடிதல்   இயல்பாம்’   என   எல்லாப்  பெயரும்  அடங்க   மொழி
மாற்றியுரைக்க.

சேனா.

இ-ள் : இயற்பெயர் முன்னர் வரும்  ஆர்  என்னும் இடைச் சொற்
பலரறி சொல்லான் முடியும். எ-று.

ஈண்டு இயற்பெயர்    என்றது,    இருதிணைக்கும்     அஃறிணை
யிருபாற்கும் உரிய பெயரை.

உ-ம் : பெருஞ்சேந்தனார் வந்தார், முடவனார் வந்தார், முடத்தாமக்
கண்ணியார்  வந்தார், தந்தையார்  வந்தார் எனவும் : நரியார்  வந்தார்
எனவும் வரும்.

தாம்,   தான்,   எல்லாம்,  நீயிர்,  நீ  என்னும்  ஐந்தும்   ஒழித்து
அல்லாவியற்  பெயர்  எல்லாவற்று முன்னரும்  அஃறிணையியற் பெயர்
எல்லாவற்று  முன்னரும்   ஆரைக்கிளவி வருதலின் 2பெரும்பான்மை
குறித்து இயற்பெயர் முன்னர் என்றார்.

நம்பியார்     வந்தார்,  நங்கையார்  வந்தார்  எனச்  சிறுபான்மை
உயர்திணைப்   பெயர்   முன்னர்   வருதல்   ஒன்றென    முடித்தல்
என்பதனாற் கொள்க.

3 ஆரைக்கிளவி   கள் என்பதுபோல ஒற்றுமைப்பட்டுப் பெயரீறாய்
நிற்றலின்,    ஆரைக்கிளவி   பலரறி  சொல்லான்  முடியும்  என்றது,
அதனை    யீறாகவுடைய   பெயர்   பலரறி   சொல்லான்   முடியும்
என்றவாறாம்.


1. ‘பெயர்     முன்னர்,  ஆரைக்கிளவி,    பலர்க்குரி  எழுத்தின்
வினையோடு முடியும் இயல்’ எனக் கொண்டு கூட்டுக. அதனால்,
பெயர் என்றது இயற்பெயர் உயர்திணைப் பெயர்,   அஃறிணைப்
பெயர் ஆகிய அனைத்தையும் குறிக்கும்.

2. பெரும்பான்மை என்றது வழக்குப் பயிற்சி மிகுதியை.

3. கோக்கள், மக்கள் எனக்  கள்  விகுதி  ஒற்றுமைப் பட்டிருப்பது
போலச் சாத்தனார் என ஆர் பெயருடன் ஒன்றியிருக்கிறது.