சொல்லதிகாரம் - இடையியல்112

‘பலர்க்குரி யெழுத்தின்   வினையொடு   முடிமே’  என்ற  உம்மை
எச்சமாகலான் ஒருமையான் வரவும் பெறும் என்றவாறு.

இதனானே இடைச்சொற்   பற்றி   வரும்  பால்  வழுவும்  திணை
வழுவும் அமைத்தவாறாயிற்று.

உ-ம் : சாத்தனார்,  சாத்தியார், நம்பியார், நங்கையார், முடவனார்,
முடத்தியார்,   தாயார்,   தந்தையார்,   கிளியார்,  மயிலார்  என்பன
ஒருமையுணர நின்றனவாயினும், வினையொடு வருங்கால் வந்தார் என
வரும்.  நம்பியார்  வந்தான்,  நங்கையார்  வந்தாள்  என  இவ்வாறு
வருதற்கேற்பனவுங்  கொள்க. ‘ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்”
(கிளவி.  27)  என்பதனுள்  அடங்காதோ எனின்,  1 ஆண்டு உரைத்த
விடையே ஈண்டும் உரைக்க.

ஆர்     என்பது   இடைச்சொல்லாயின்  இப்பெயருடையார் பலர்
வந்துழிக் கூறுமாறு என்னையெனின், அதனானே   யன்றேமார் என்பது
வேறு  எடுத்தோதல்  வேண்டிற்று.  ‘எல்லா  வுயிரொடுஞ் செல்லுமார்
முதலே’ (மொழி. 28) என்புழி ஆர் அசை நிலையாயிற்று.

நச்.

இது மேலதற்குப் புறனடை.

இ-ள் : சைநிலைக்  கிளவி  ஆகு  வழி  அறிதல்  -  அவ்  வார்
என்னுஞ் சொல் அசைநிலைச் சொல்லாம் இடம் அறிக, எ-று.

‘ஆகுவழி யறிதல்’  என்றதனான்,  உம்மை  முன்னரும்  உம் ஈற்று
வினை முன்னரும் வருதல் கொள்க.

உ-ம் : ‘பெரினாகிய தொகையுமா  ருளவே’,  ‘எல்லா  வுயிரொடுஞ்
செல்லுமார் முதலே’ என வரும்.


1. ஆண்டு  உரைத்த விடை : “இயற்பெயர் முன்னர்     ஆரைக்
கிளவி -  பலர்க்குரியெழுத்தின்  வினையொடு முடிமே’ என்புழி
யடங்காதோ  எனின்,  ஆண்டு நம்பி நங்கை சாத்தன் என்னும்
பெயர்   தானே  பால்    காட்டுதலால்   அதன்   மேல்  ஓர்
இடைச்சொல்லாயிற்று,     ஈண்டுப்   பன்மைச்    சொற்றானே
ஒருமைக்கு வருதலின் அடங்காதாயிற்று என்க” - என்பது.