சொல்லதிகாரம் - இடையியல்135

என்னும்.  அவ்விடத்து   ‘ஆக’  என்னும்  இடைச்சொல்  பிரிவின்றி
இரட்டித்து நின்றவாறு கண்டுகொள்க.

‘யான்   உனக்கு யாதும் ஆகேனோ?’ என்றக்கால் ‘ஆகல் ஆகல்’
என்பது  அவ்விடத்து,  ‘ஆகல்’  என்னும்  இடைச்சொல்  பிரிவின்றி
வந்தவாறு காண்க.

ஒருவனை ஒருவன்  ஒன்று சொன்னால், கேட்டு நின்றான் ஒருவன்,
‘என்பது  என்பது’  என்னும்,  அது புகழ்ச்சியிடத்துப் பயிற்சியுடைத்து:
அறிந்து கொள்க,

சேனா.

இ-ள் : ஆக  ஆகல் என்பது  என்னும்   மூன்றிடைச்  சொல்லும்
அசைநிலை யாங்கால் இரட்டித்து நிற்கும், எ-று.

‘பிரிவில் அசைநிலை’ எனவே,  தனித்து  நின்று அசைநிலை யாகா
வென்பதாம்.

உ-ம் : ஒருவன்  ‘யான்   இன்னேன்’  என்றானும்,  நீ  யின்னை’
என்றானும்,  அவன்  இன்னன்’   என்றானும் கூறிய வழிக்  கேட்டான்
ஆக ஆக, ஆகல் என்னும்: இவை  உடம்படாமைக் கண்ணும் ஆதரம்
இல்வழியும்  வரும்.  ‘ஒருவன்   ஒன்றுரைப்பக்  கேட்டான்  ‘என்பது
என்பது’  என்னும். அது நன்கு  உரைத்தற்கண்ணும் இழித்தற்கண்ணும்
வரும். பிறாண்டுவரினும் வழக்கு நோக்கி யுணர்ந்து கொள்க.

தெய்.

இதுவுமது.

இ-ள் : இவை மூன்று சொல்லும்  பிரிவின்றி  இரட்டித்த  விடத்து
அசை நிலையாம் என்றவாறு.

உ-ம்: ஆக, ஆக, ஆகல் ஆகல், என்பது என்பது எனவரும்.

நச்.

இது  தாஞ் சார்ந்து  நின்ற சொல்லின் பொருண்மையை உணர்த்தி
நிற்கும் இடைச் சொற்களைக் கூறுகின்றது.

இ-ள் : ஆக ஆகல் என்பது என்னும் ஆவயின் மூன்றும் - ஆக
ஆகல்  என்பது  என்று  சொல்லப்படுகின்ற   அவ்விடத்து  மூன்றும்,
பிரிவு  இல்  அசைநிலை - தாஞ்சார்ந்த  சொற்களின் பொருள்களைப்
பிரிதலின்றி உணர்த்தும் அசை நிலையாம், எ-று.