சொல்லதிகாரம் - இடையியல்139

உதாரணங்களில்     இரட்டித்து  வந்தமை  யுண்மையாயினும்  அம்
மூன்றும்  அசை  நிலைப்  பொருளில்  வரவில்லை.  அவை  உடன்
பாட்டுப் பொருளிலும் புகழ்ச்சிப் பொருளிலும் வந்தன.

தெய்வச்சிலையார்  தந்த உதாரணம் விளக்கம் இல்லை. ஆக ஆக,
ஆகல்  ஆகல்,  என்பது  என்பது  என்றே  காட்டியமை நன்றாகாது.
எனவே  உரையாளர்  யாவர்  கருத்தும்  பொருத்த  முடையனவாகத்
தோன்றவில்லை.

இனி என் கருத்து வருமாறு:-

உலக வழக்கில் வந்தேனாக்கும் வந்தாயாக்கும், வந்தானாக்கும் என
மூவிட  வினைகளும்  ‘ஆக்கும்’  என்னும்  இடைச்  சொற்  சார்த்தி
வழங்கப்  பட்டுவருதலைக் காண்கிறோம். வந்தேன்; வந்தாய்: வந்தான்
என்பனவே  அவற்றின்  பொருள். எனவே, அவற்றிலிருக்கும் பிரிவில்
அசை  நிலையாக  ‘ஆக்கும்’  என்பதுள்ளது.  அவ்வாறேவந்தேனாக,
வந்தாயாக,    வந்தானாக    எனத்    தொல்காப்பியர்    காலத்தில்
வழங்கியிருக்க   வேண்டும்.  இப்படியே  ஆகல்,  என்பது  என்னும்
சொற்களும் வழங்கியிருத்தல் வேண்டும். அவை இன்று வழக்கிறந்தன.

‘கற்றதனா  லாய பயனென் கொல்’ என்னும் தொடர்க்குப் பொருள்
எழுதுங்கால் ‘என்கொல்’ என்பதில் ‘என்’ என்பதற்கு மட்டில் பொருள்
எழுதிக்   ‘கொல்’   என்பது  அசை  நிலை  என  எழுதுவர்.  ‘என்’
என்பதற்குரிய  பொருளே  தனக்கும்  பொருளாக  இருந்தாலும் என்,
கொல் எனத் தனியாகப் பிரிக்கப் படும்.

“ஆதி மந்தியின் அறிவு பிறிதாகிப்
பேதுற்றிசினே...... தோழி”                (அகம்.5)

என்ற  விடத்துப்  ‘பேதுற்றிசின்’  என்ற சொற்குப்  பொருள் எழுதும்
போது   ‘இசின்’  என்ற  இடைச்  சொல்லைத்  தனித்துப்  பிரித்துப்
பொருள்  எழுதுதல்  இல்லை. ‘சென்றீ பெரும’ என்னுமிடத்தில் செல்,
யீ  எனப்  பிரித்துச்  ‘செல்’  என்பதற்கு மட்டில் பொருள் எழுதுதல்
இல்லை.  சென்றீ  என்பதற்கே  எழுதுதல் உண்டு. இப்படிப் பிரிக்கப்
படாமல் வருவதே பிரிவில் அசை நிலை என்னலாம்.

எனவே     அசைநிலை, தான் சார்ந்து வரும் சொல்லில் பிரிந்து
வருதலும்  பிரியாது  வருதலும்  என  இரு  நிலையுடைய தாம் என
அறியலாம்.  அதனால்  வந்தேனாக்கும் என்பதிற் போல, வந்தேனாக,
வந்தேனாகல், வந்தேன் என்பது என்ற