சொல்லதிகாரம் - இடையியல்59

பேய்ச்சுரையின்     காய்”    (நாலடி.116)    “குறவரும்     மருளும்
குன்றத்துப்படினே”   (மலை.  275)  “ஊர்க்கும் அணித்தே பொய்கை”
(குறுந்.113)  என்பன வுயர்வு. ‘அவ்வூர்ப் 1 பூசையும்  புலால் தின்னாது’
என்பன இழிவு.

“ஒன்று, இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம்
புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன்
வல்லாரை வழிபட்டொன் றறிந்தான் போல்
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
வல்லான் போல்வதோர் மதுகையும் உடையன்
அன்னான் ஒருவன்”                         (கலி.47)

என்புழி   இன்னான்  என்று  துணியாமைக்கண்  வருதலின் ஐயம்.
2”பொய்கைக்குச்  சேய்த்து   மன்றே  சிறுகான்   யாறே”  (குறுந்.113)
என்பதும் அது.

சாத்தன் வருதற்கும் உரியன் என்பது, வாராமைக்கும் உரியன்  என
எதிர்மறையை   ஒழிபாக  வுடைத்தாய்  நிற்றலின்,  எதிர்மறை.  இஃது.
“அஃறிணை   விரவுப்  பெயர் இயல்புமாருளவே” (எழுத்.தொகை மரபு.
13)  எனப்   பண்பு  பற்றியும்  வரும்.  இது பிறிதோர்  பொருளினைத்
தழுவாது   ஒரு  பொருளின்  வினையை மறுத்து நிற்றலின்  எச்சத்தின்
வேறாயிற்று.    மேல்    ஆசிரியர்,  ‘எதிர்மறை  எச்சம்’  (எச்ச.  39)
என்றமையின்  இஃது   எச்சத்தின்   கூறாம்.  தமிழ்நாட்டு  வேந்தரும்
வந்தார்,  ‘யாதும்  ஊரே’  (புறம்.  92),   ‘நாளும்  அன்னான் புகழும்
அன்னை’  என்பன   முற்றும்மை.   “நிலனும்  நீரும்  தீயும்  வளியும்
ஆகாயமும்  எனப்   பூதம்  ஐந்து”  என்பன  எண்.  மண்  திணிந்த
நிலனும், நிலன் ஏந்திய  விசும்பும்,  விசும்பு தைவரு வளியும்’ (புறம். 2)
என்பதும் அது.

“இரு  நிலம்  அடிதோய்தலின்  திருமகளும்  அல்லள்; அரமகளும்
அல்லள்;  இவள்  யாராகும்?”  என்பது திருமகளோ அரமகளோ  என
ஐயுறாது ஆராய்தற்கண் வருதலின் தெரிநிலை.


1. பூசை - பூனை

2. பொருள் :  சிறிய  காட்டாறு  பொய்கைக்குத்  தொலை வான
தன்று.