மொழியிறுதியில் வாராத எழுத்தாகிய ஒளகார உயிர் எழுத்து” என்பது பொருள். இதனை இளம்பூரணரும் சேனாவரையரும் கொண்டனர். ஆஈஊஏஐஓ பற்றியதாகக் கொண்ட தெய்வச்சிலையார், முதலடிக்கு “இரண்டு அளபு இசைக்கக்கூடிய இறுதி, உயிராகிய ஒளகாரம் இல்லாத மற்றைய உயிர் எழுத்துகள்” எனக் கொண்டார். நச்சினார்க்கினியர், முதலிரண்டடிகளுமே கௌ வௌ பற்றியதாகக்கொண்டு “இரண்டளபு இசைக்கும் மொழியிறுதியில் வாராத ஒளகாரம் “கவவோ டியையின்ஒளவுமாகும்” என்னும் விதிப்படி வருங்காலத்தில் அதாவது கௌ வௌ என வருங்காலத்தில்” எனப் பொருள் கொண்டார். இம்மூவகைக் கருத்துகளுள் எது ஏற்கத்தக்கது என்பது காண வேண்டுவது. நச்சினார்க்கினியர், காலத்தானும், காலத்தானும், வருகாலையும் என்பனவற்று உம்மைகளுள், முதலில் உள்ளது சிறப்பும்மை என்றும், பின்னர் உள்ளன எண்ணும்மை என்றும் கொண்டார். சூத்திரப்போக்கு மூன்றுமே எண்ணும்மை எனக் கொள்ளக் கிடப்பதாலும், “ஆயியல் நிலையுங் காலத்தானும்” என்பதற்கு முன் சூத்திரத்தைக் கொள்ளாமல் எழுத்ததிகாரத்துள்ள சேய்மைச் சூத்திரமாகிய ‘கவவோ டியையின் ஒளவுமாகும் என்பதைக் கொள்ளல் வலிந்து கோடல் ஆகுமாதலயனும், ஒளகார இடைச்சொல் பற்றியும் அடுக்கி வரும் பிற இடைச்சொல் பற்றியும் ஆசிரியர் கூறாது போயினார் என்னும் குற்றம் தங்குமாதலினாலும் நச்சினார்க்கினியர் கருத்து அத்துணைச் சிறப்பின்று என்க. அவர் காட்டிய உதாரணங்கள் கௌஉ, வௌஉ, என அளபெடுத்தல் இல்லாமல் உகரச் சாரியை பெற்றுக் கௌவு வௌவு என்றே வரும். இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் உரை பொருந்தும் என்று தோன்றவில்லை என்பர் ச.வே. சுப்பிரமணியன் அவர்களும் (இலக்கணத்தொகை.சொல் பக்.312.) இளம்பூரணரும் சேனாவரையரும் காட்டிய ஒளகார இடைச்சொல் பற்றிய வழக்குத் தெய்வச்சிலையார் காலத்தில் இல்லைபோலும்; அவ்விருவரும் ஆ,ஈ,ஊ,ஏ,ஓ என்னும் இடைச்சொற்கள் இரட்டித்து வருதலையும் அளபெடுத்து வருதலையும் |