ஆசிரியர் கூறாது விட்டார் என்னும் குற்றம் தங்கும் எனவும் கருதினார் போலும், அதனால் அவர் ‘ஈரளபிசைக்கும் இறுதியில் உயிர்’ என்பதற்கு ஒள நீங்கிய உயிர்களைக் கொண்டார். இதனால் அவர் ஒளகார இடைச்சொல் ஒன்றில்லை எனக் கொண்டார் என்னலாம். இனி இளம்பூரணர் சேனாவரையர் காலத்தில் ஒளகார இடைச் சொல்வழக் கிருந்திருத்தல் வேண்டும். இல்லையேல் இக்காலத்து வழக்கொழிந்தது என்று கூறியிருப்பர். அப்படியாயின் ஒளகார இடைச்சொல்லும் ஆசிரியர் கூறியதாகக் கொள்ளல் வேண்டும். எனவே ஈரளபிசைக்கும் இறுதியில் உயிர் என்பதை ஈரளபிசைக்கும் உயிர் என்றும், ஈரளபிசைக்கும் இறுதியில் உயிர் என்றும் கொள்ளுமாறு அமைந்ததாகக் கொண்டு பொருளுரைத்து நெட்டெழுத்து ஏழும் கொள்ள இச்சூத்திரம் அமைந்தது என்னலாம். இராம-சுந்தரம் சேனாவரையருக்குத் தந்த மறுப்புப் பொருத்தமானதேயாம். பால. கருத்து : ‘ஒள’ என்னும் ஓரெழுத்தொரு மொழி இடைச்சொல்லாய்பொருட் குறிப்புணர்த்தி வருமாறு கூறுகின்றது. பொருள்: இரண்டு மாத்திரை யளவிற்றாயிசைக்கும் மொழியிறுதியாகி வருதலில்லாத உயிரெழுத்தாகிய ஒளகாரம், மேற்கூறிய இடைச் சொற்களைப்போல இரட்டித்து நிற்குமிடத்தும், அளபெடுத்து நிற்குமிடத்தும், அளபெடாதுதனித்து நிற்குமிடத்தும், குறிப்பானும் இசையானும் நெறிப்படத் தோன்றுதலான் அதன் பொருள் வேறுபடுதல் உளவென்று கூறுவர் புலவர். இஃது இடைச் சொல்லாய்ப் பொருள் குறித்து நிற்கும் என்றலின் ஆயியல் நிலையும் காலத்தானும் என்றது பிரிவின்றி இணைந்து வரும் நிலையை மட்டுமே சுட்டிற்றென அறிக. கௌ, வௌ என்னும் உயிர்மெய்களை நீக்குதற்காக இறுதியில்லுயிரே என்றும், எகர ஓகரங்களை நீக்குவதற்காக ஈரளபிசைக்கும் என்றும் கூறினார். இங்ஙனம் இவ் ஒளகாரம் இணைந்தும் அளபெடுத்தும் தனித்தும் வருங்கால் ஒன்றற்கொன்று ஓசையான் வேறுபடுதலின் “குறிப்பின், இசையின், நெறிப்படத் தோன்றலான்” என்றார். |