வ-று : ’நன்றீற்றுஏ: ‘நன்றே நன்றே’ எனவரும். அன்றீற்றுஏ: ‘அன்றே அன்றே’ எனவரும். அந்தீற்றுஓ: ‘அந்தோ அந்தோ’ எனவரும். அன்னீற்றுஓ: ‘அன்னோ அன்னோ’ எனவரும். சேனா. இ-ள் : நன்றீற்று ஏயும் அன்று ஈற்று ஏயுமாவன நன்றே அன்றே என்பன. அந்தீற்று ஓவும் அன்னீற்று ஓவுமாவன அந்தோ அன்னோ என்பன. நன்றினதீற்றின் கண் ஏயென விரியும். இவ்விரிவு ஏனையவற்றிற்கும் ஓக்கும். 1 நன்றீற்றே என்பதனான் நம்மூர்ந்து வரூஉம் இகர ஐகாரமும் (பெயரி-9) என்புழிப் போலச் சொல் முழுவதும் கொள்ளப்படும். ஒழிந்துனவும் அன்ன. ‘குறிப்பொடு கொள்ளும்’ என்றது மேலதுபோல இவையும் குறிப்போசையாற் பொருளுணர்த்தும் என்றவாறு. உ-ம் :ஒருவன் ஒன்றுரைத்தவழி அதற்கு மேவாதான் நன்றே நன்றே, அன்றே அன்றே என அடுக்கியும் வரும்; அவை மேவாமைக் குறிப்பு விளக்கும். ‘அவனன்றே இது செய்வான்’ என அடுக்காது நின்றவழி. அன்றீற்றேவுக்குத் தெளிவு முதலாகிய பிறபொருளும் படும். ஏனையிரண்டும் அடுக்கியும் அடுக்காதும் இரங்கற் குறிப்பு வெளிப்படுக்கும். இவையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்குவன. அன்ன பிறவும் என்றதனான் ‘அதோ அதோ’ ‘சோசோ’ ‘ஒக்கும் ஒக்கும்’ என்னுந் தொடக்கத்தன கொள்க. தெய். ‘ஏகார ஓகாரங்கட்கு வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :அன்று என்பனவற்றின்கண் வரும் ஏகாரமும், அந்து அன் என்பனவற்றின்கண் வரும் ஓகாரமும் அத்தன்மைய பிறவும் மேற்கூறியவாற்றானன்றிக் குறிப்புப் பொருளோடும் ஏற்கும்; உம்மை யிறந்தது தழீ இயற்று எ-று.
1. நம்மூர்ந்து வரூஉம் இகர ஐகாரம் என்றவழி (நம்+இ=) நம்பி, (ஙம்+ஐ=) நங்கை என முழுச் சொல்லையும் கொள்வதுபோல ‘நன்றீற்றே’ என்றவழி ‘நன்றே’ என்னும் முழுச் சொல்லையும் கொள்க. |