ஈற்று ஓவும்-அன்னினது ஈற்றின் கண் வந்த ஓவும், அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்-அவைபோல்வன பிறவும், சொல்லுவான் குறிப்போடு பொருள் உணர்த்தி நிற்கும், எ-று. ஒருவன், கொலை, களவு, கள், காமம், பொய் என்பனவற்றை விரும்புக என்ற வழி, ‘அவற்றை விரும்புதல் நன்றே’ என்றால் மேவாமைக் குறிப்பு உணர்த்தும். ‘நின்றே எறிப பறையினை - நன்றே காண்’ (நாலடி.24) என்பது தீது என்னுங் குறிப்பு உணர்த்தும். ‘இஃது ஊழன்றே’ என்றால் ‘அஃது இங்ஙன் நுகர் வியாது ஒழியுமோ’ என்னும் குறிப்பு உணர்த்தும். அந்தோ! எந்தை யடையாப் பேரில்’ (புறம். 261) ‘அன்னோ! என்னாவது கொல் தானே’ (புறம்.345) என்பன இரக்கக் குறிப்பு உணர்த்தும். இவ்வேகார வோகாரங்கள் பல சொல்லோடு அடுத்து வாராது இச் சொற்களையே அடுத்துப் பொருள் வேறுபட்டு நிற்றலின், அவற்றைப் பெயர் தந்து வேறு கூறினார். அன்ன பிறவும் என்றதனான் அன்னா அலமரும் ஆருயிரும் என்புழி ‘அன்னா’ இரக்கக் குறிப்பு உணர்த்துதல் கொள்க. இதனை ஓகாரம் ஆகாரமாய்த் திரிந்தது. என்றலுமாம். ‘ஏஎ இவளொருத்தி பேடியோ என்றார்’ (சீவக.652) என ஏகாரத்தின் பின் வந்த எ இழிபு உணர்த்துதலும், ‘அ,ஆ இழிந்தான்’ (நாலடி.9) எனவும், ‘ஐயா வென் ஐயா அகன்றனையே’ (சீவக. 1802) எனவும். ‘ஆவம்மா வம்மாவென் அம்மா அகன்றனையே’ (சீவக 1804) எனவும் ஆகாரம் இரக்கக் குறிப்பு உணர்த்துதலும் பிறவும் கொள்க. ஆதி. நன்றே, நீ போய் வா-அசை நிலை (போதும் எனப் பொருள்) விதி வலிதன்றே-அன்றே அசை (தப்ப முடியாது) அந்தோ அடிகள் மறைந்தார்-இரங்கல் அன்னோ யார் இது பொறுப்பார்-இரங்கல் இவ்வாறுள்ள பிற: அடடா, ஐயோ, அம்மாவோ, அம்மாடீ. பால. கருத்து : ஒரு சார் குறிப்பிடைச் சொல் ஆமாறு கூறுகின்றது. பொருள் : நன்றே என வரும் சொற்களும் அந்தோ அன்னோ என வருஞ் சொற்களும் அவைபோல்வன |