யானும் வருவேன் அவனும் வரமாட்டான் என்பது முறைகேடு. உடன்பாடு உடன்பாட்டோடும், எதிர்மறை எதிர்மறையோடும் சேர்தல் வேண்டும். சுப். உரையாசிரியர், சேனாவரையர், தெய்வச்சிலையார் இம்மூவர் மதமும் ஒன்றே. உரையாசிரியர் கொடுத்துள்ள உதாரணத்திற் சாத்தானும் வந்தான், கொற்றனும் ‘வரலு முரியன்’ என்னுமிடத்து வரலுமுரியன் என்பதற்குப் பிரதியாக ‘வரலுரியன்’ என்றிருப்பின் நலம். நச்சினார்க்கினியர் கூறும்பொருள், இரண்டு எச்சவும்மையும் ஓர் எதிர்மறையும்மையும் ஒரு தொடரில் வந்தாற்றான் பொருந்தும். சூத்திரப் போக்கை நோக்குமிடத்து அவ்வாறு கொள்ள வேண்டுவது அவசியமின்று. இக்காலத்தில் உலகவழக்கும் ‘சாத்தனும் வந்தான், இனிக் கொற்றன் வரினும் வரும்’ என்றே உளது. சிவ. இச்சூத்திரப் பொருள் இரண்டுவகையில் கூறப்படுகிறது. ‘எச்சவும்மையும் எதிர்மறை உம்மையும் ஒரே தொடரில் சேர்ந்துவருதல் இல்லை. என்பது ஒன்று, எச்சவும்மையும் எதிர்மறை உம்மையும் ஒரு தொடரில் சேர்ந்துவரும்; ஆனால் தனித்தனிவினை கொள்ளுவதன்றி ஒருவினை கொள்ளா என்பது மற்றோர் உரை. உதாரணமாக உரையாளர் காட்டிய உதாரணங்கள் பொருத்தமாக இல்லை. ‘சாத்தானும்வந்தான்’ என்பதில் உம்மை எச்சஉம்மை. இது கொற்றனும் வந்தான் அல்லது வரும் என்னும் எச்சத்தை கொற்றன் வரவைத் தழுவியது. அதே போல கொற்றனும் என்பதின் உம்மை சாத்தன்வரவைத் தழுவியது. எனவே எச்சவும்மைகளை ஒரு தொடரில் வைத்துச் சொல்வதாயின் சாத்தனும் வந்தான். கொற்றனும் வந்தான் அல்லது வரும் எனச்சொல்க. இது தம்முள் மயங்கியவாறு ‘சாத்தன் வரலும் உரியன்’ என்பதில் வரலும் என்பதன் உம்மைச் சாத்தன் வாராமைக்கும் உரியன் என எதிர்மறைப் பொருளைத்தழுவியது. ‘சாத்தன் வரலும் உரியன்; வாராமைக்கும் உரியன்’ என்னுந் தொடரில் வரலும் என்பதன் உம்மை |