உ-ம் :‘சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான்’: ‘அடகு புலால் பாகு பாளிதமும் உண்ணான் கடல்போலும் கல்வியன்’ எனவரும், பிற்படக்கிளப்பின் பொருள் கொள்ளாமை காண்க. ‘செஞ்சொல் ஆயின் முற்படக்கிளக்க’ எனவே, ‘உம்மையோடு வரின் பிற்படக்கிளக்க என்றவாறாம். சிவ. எஞ்சு பொருட்கிளவி என்பதற்கு இளம்பூரணர், எச்சப் பொருளைத் தரும் உம்மையிடைச் சொல் என்று கொள்ள மற்றையோர் ‘எச்ச உம்மையால் தழுவப்படும் சொல்’ என்று கொண்டனர். இளம்பூரணர் கருத்துப்படி இச்சூத்திரம் “செவ்வெண்ணாகவரும் செஞ்சொற்கள் தொடர் மொழியில் வருங்கால் உம்மையிடைச்சொல் முன்னர் உள்ள சொல்லில் வைத்துச் சொல்லப்படும்” பின்னர் உள்ள சொற்களில்வைத்துச் சொல்லப்படாது” என்னும் பொருளுடையதாகும். அதற்கு உதாரணம் அவர்காட்டிய ‘அடகு புலால் பாகு பாளிதமும் உண்ணான்’ என்பது. கருத்தைக் கொண்டே நன்னூலார் ‘செவ்வெண் ஈற்றதாம் எச்சவும்மை’ (427) என்றார். மற்றையுறையாளர்கள் எஞ்சு பொருட்கிளவி என்பதற்கு எச்சவும்மையால் தழுவப்படும் சொல் எனப் பொருள் கொண்டனர். ‘சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான்’ என்ற தொடரில் கொற்றனும் வந்தான் என்பதில் உள்ள உம்மை எச்சவும்மை. அதனால் தழுவப்படும் பொருள் சாத்தனும் வந்தான் என்பது. அதனால் சாத்தனும் என்பது எஞ்சு பொருட்கிளவியாம். அச்சாத்தனும் என்பது உம் இல்லாமல் இருப்பின்-அதாவது சாத்தன் என்றே இருப்பின் அதனை முன்னர்ச் சாத்தன் வந்தான் என்று வைத்துப் பின்னரே கொற்றனும் வந்தான் என்னல்வேண்டும். கொற்றனும் என்பதன் உம்மை எஞ்சியதைத் தழுவும்எச்ச வும்மையாக இருத்தலால் அதனையுடைய சொல்லை எங்கு வைத்துச் சொன்னாலும் மற்றொன்றைத் தழுவத்தானே செய்யும் என முன்னர் வைத்துக் கொற்றனும் வந்தான் சாத்தன்வந்தான்’ என்று சொல்லுதல்கூடாது. இவ்வாறுகூறியவர் மற்றையோர். இவரே இளம்பூரணர் உரையையும் உதாரணத்தையும் ஏற்றனர். எனவே இருவகைப் பொருளையும் இச்சூத்திரத்தில் அடக்கிக் கொள்ளலாம். இளம்பூரணர் காட்டிய உதாரணம் ஒரே தொடராயது. மற்றையோர் காட்டிய உதாரணம் இரு தொடராயது உளம் கொளத்தக்கது. |