சொல்லதிகாரம் - இடையியல்164

சேனா.

இ-ள் :  முற்றும்மையடுத்து  நின்ற தொகைச்  சொல்லிடத்து எச்சச்
சொல்லுரித்துமாம், எ-று.

உ-ம் :பத்துங்  கொடால்,    அனைத்துங்   கொடால்   என்புழி
முற்றும்மை  தம் பொருள் உணர்த்தாது ‘சில  எஞ்சக் கொடு’ என்னும்
பொருள் தோன்றி நின்றவாறு கண்டு கொள்க.

முற்றுதல்     என்னும்  பொருளது   பண்பு   முற்றியவும்மையென
ஒற்றுமை நயத்தாற் சொன்மேல் ஏறி நின்றது.  ‘உரித்துமாகும்’  எனவே,
எச்சப் பொருண்மை குறியாது நிற்றலே பெரும்பான்மையென்பதாம்.

ஏற்புழிக் கோடல் என்பதனான்  எச்சப்படுவது  எதிர்மறை வினைக்
கண் என்று கொள்க.

பத்துங்   கொடு’ என்பது ‘பிறவுங்கொடு’ என்பதுபட நிற்றலின் விதி
வினைக்கண்ணும்  எச்சம்  குறிக்கும்  என்பாரும்  உளர். ‘இப்பொழுது
பத்துங்  கொடு’  என்பது கருத்தாயின் ‘இப்பொழுது  பத்துக்கொடு’என
உம்மையின்றியும்  பொருள்  பெறப்படும்; பத்துங்கொடு  பிறவும் கொடு
என்பது    கருத்தாயின்   இஃது    எச்சவும்மையாகலின்   ஈண்டைக்
கெய்தாது; அதனான் அது பொருத்தமின்றென்க.

இவை மூன்று  சூத்திரத்தானும்  வழுவற்கவென  இடைச் சொற்பற்றி
மரபு வழுக்காத்தவாறு.

தெய்.

இதுவும்  உம்மைக்கண்   வருவதோர்   வேறுபாடு   உணர்த்துதல்
நுதலிற்று.

இ-ள் ; முற்றும்மைத்  தொகைச் சொற் பொருண்மைக்கண்  எச்சப்
பொருண்மையும் உரித்து.

ஈண்டுத் தொகை என்றது எண்ணின் தொகை.

உ-ம் :‘நின்கையிற்  காணம்பத்தும்   கொடால்’  என்றவழிச்  சில
கொடுக்க என்றவாறாம். இது மறுத்த வாய்பாட்டானல்லது வாராது.


1. ஈண்டைக்கு-எதிர்மறை பற்றிக் கூறும் இவ்விடத்துக்கு.