உ-ம் :‘கடல் போல் தோன்றலகாடிறந்தோரே எ (அகம்1) ‘அகில்படு கள்ளியங் காடிறந் தோரே எ’, ‘தண்கடல் வேலி நின் குடநா டற்றேஎ’ இவை போல்வன பிறசான்றோர் செய்யுட்கள் எல்லாம் மூன்று மாத்திரை பெற்றுப் பா என்னும் உறுப்பை விளக்கி நிற்குமாறு காண்க. இனி, ‘அவரே ஏஎர், கேடில் விழுப் பொருள் தருமார் பா சிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே எ’ (குறுந் 216) எனச் செய்யுள் இடைக்கண் வரும் ஈற்றசை ஏகாரம் இரண்டு மாத்திரை பெற்றுப் பா என்னும் உறுப்பை விளக்கி நின்றவாறு காண்க. இஃது ஈற்றசையாகலின் செய்யுளியலிற் கூறும் மாத்திரை என்னும் உறுப்பின் கண் அடங்காது என்று ஈண்டுக் கூறினார், அது பெரும்பான்மை பொருள் தருஞ் சொற்கே விதியாதலின். ஆதி. செய்யுள் ஈற்றில் இசை நிறையாக நிற்கும் ஏ, மொழியில் இரண்டு மாத்திரையிற் குறைந்து ஒரு மாத்திரையாகவும் உரியது. ஓரளவு ஆகல்-ஒரு மாத்திரை அளவு ஆதல். ஆதலும் உரித்தே- ஆதலும் உரித்தெ என ஒலிப்பதாகக் கூறுகின்றது. ஆய்வு : இது அத்துணைப் பொருத்தம் அன்று. ஆயின் ‘கூற்றுவயின்’ என்பது உலக வழக்கு உரை நடையில் எனின் பொருந்துவதாகும். இப்போது போகிறது எங்கே-போகிறது எங்கெ? ஓடியவன் இவன்தானே-ஓடியவன் இவன் தானெ? அங்கு உட்காரலாமே-அங்கு உட்காரலாமெ. சிவ. இச்சூத்திரம் ஏகாரக் குறுக்கம் கூறுதல் நுதலிற்று என்னலாம், ஏகாரம் தன் இரண்டு மாத்திரையிற் குறைந்து ஓரு மாத்திரையாக ஒலித்தலும் உண்டு என்பதால். ஏகாரக் குறுக்கம் ஒன்றுண்டு என்பது புலவர் சச்சிதானந்தம் கருத்து1.
1. இந்தியப் பல்கலைக் கழகத்தமிழாசிரியர் மன்றம் திருவனந்த புரத்தில் 1972-ல் நடத்திய நான்காவது கருத்தரங்கில் ஏகாரக் குறுக்கம் உண்டு என்ற கருத்தை இவர் வெளிப்படுத்தியுள்ளார். |