சொல்லதிகாரம் - இடையியல்174

இ-ள் : எண்ணுதற்    பொருளில்   வரும்   ஏகாரம்   எண்ணும்
பொருள்தோறும்  வாராது  இடையிட்டு   வந்தாலும் பொருள் தோறும்
இயைந்து எண்ணுதற் பொருளதாம், எ-று. 

உ-ம் : ‘மலை  நிலம்  பூவே  துலாக் கோல் என்றின்னர், எனவும்,
‘தோற்றம்  இசையே  நாற்றம்  சுவையே யுறலோ  டாங்கைம் புலனென
மொழிப’ எனவும் எண்ணேகாரம் இடையிட்டு  வந்ததாயினும் ‘மலையே
நிலமே  பூவே  துலாக்கோலே  என்று  இன்னர்’  என  எண்ணப்படும்
பொருள்தோறும் சென்றியைந்து எண்ணுதற் பொருள்  தந்தவாறு கண்டு
கொள்க.

சிவ.

(1) இச்சூத்திரப்  பொருள்  நான்கு வகையில் கூறப்படுகின்றது. சில
பொருள்கள்  எண்ணப்படும்போது   எண்ணுப்  பொருள்தரும் இடைச்
சொற்களுள்  ஏதேனும்  ஒன்று  பொருள்  தோறும்  இருக்க இடையில்
ஏகாரம்   வரின்  அப்பொருள்கள்  எண்ணேகாரப்   பொருளனவாகக்
கருதப்படும்.

உ-ம் : ‘நிலனென  நீரெனத்  தீயே வளியெனக் காயம் என பூதம்
ஐந்து’  என்ற  வழி என என்பது சொற்றொறும் வர இடையே ஏகாரம்
வந்தமையின்  அத்தொடர்  எண்ணேகாரப்  பொருள்  தொடர் எனக்
கொள்ளல் வேண்டும்.

(2) ‘சில  பொருள் எண்ணப்படும்போது முதலில் தொடங்கப்படும்
பொருள் எந்த எண்ணுப் பொருட்  சொல்லால் தொடங்கப்படுகின்றதோ
அந்தச்  சொல்லாலேயே இன்ன  எண்ணுத்தொடர்  என வழங்கப்படும்,
இடையே ஏகாரம் வந்தாலும்’ என்பது ஒரு கருத்து.

உ-ம் : “தோற்றம் மிசையே நாற்றம் சுவையே
           உறலோடு ஐந்தும் புலனென மொழிப”

இதில் தோற்றம்  என்பது யாதோர் எண்ணிடைச் சொல்லும் இன்றிச்
செவ்வெண்  நிலையில்  தொடங்கப்பட்டது. என்றாலும் இடையே ஏகார
இடைச்சொல்லும் இறுதியில் ஓடு  இடைச்சொல்லும்  வந்தன. என்றாலும்
தொடங்கப்பட்ட   செவ்வெண்ணுப்  பொருளதாகவே   அத்தொடரைக்
கருதுதல் வேண்டும்.

இவையிரண்டும் இளம் பூரணர் கருத்து.

(3) எண்ணப்படும் பொருள்தோறும்  ஏகாரம்  இல்லாமல் இடையே
ஓரிடத்து   மட்டும்   ஏகாரம்   வரினும்   எண்ணேகாரப்  பொருளில்
அத்தொடர் வந்ததாகக் கருதப்படும்.