‘சாத்தன் கொற்றன் பூதன் என மூவரும் வந்தார்’ என வரும் செவ்வெண். சாத்தன் என்றா கொற்றன் என்றா பூதன் என்றா என மூவரும் வந்தார்’ எனவரும் என்றா எண். ‘சாத்தனே கொற்றனே பூதனே என மூவரும் வந்தார்’ என வரும் ஏகார எண். தொகை பெற்று முடிந்தவாறு கண்டு கொள்க. சேனா. இ-ள் : மேற்சொல்லப்பட்ட எனா என்றா என்பனவற்றான் வரும் எண்ணின் இறுதியும் இடைச் சொல்லானன்றிப் பெயரான் எண்ணப்படும் செவ்வெண் இறுதியும் ஏகாரத்தான் வரும் எண்ணின் இறுதியும் யாதானும் ஓரிடத்து வரினும் தொகையின்றி நில்லா, எ-று. உ-ம் : ‘நிலனெனா நீரெனா விரண்டும்’ எனவும், நிலனென்றா நீரென்றா விரண்டும் எனவும், நில நீரென விரண்டும் எனவும், நிலனே நீரேயென விரண்டும் எனவும் தொகை பெற்று வந்தவாறு. செவ்வெண் இடைச்சொல்லெண் அன்று ஆயினும் எண்ணாதலும் தொகை பெறுதலுமாகிய ஒப்புமையான் ஈண்டுக் கூறினார். தெய். எண்ணுதற்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : மேற் சொல்லப் பட்ட எனா என்றா என்பனவற்றான் வரும் எண்ணின் இறுதியும், பெயர்க்குரி மரபினால் எண்ணப்படும் செவ்வெண் இறுதியும் ஏகாரத்தான் எண்ணப்பட்ட எண்ணின் முடிவும் யாதானும் ஒரு நெறியான்வரினும் தொகையின்றி வழங்கா, எ-று. உ-ம் : மாத்திரை யெழுத்திய லசை வகை யெனாஅ யாத்த சீரே யடியாப் பெனாஅ மரபே தூக்கே தொடைவகை யெனாஅ நோக்கே பாவே அளவிய லெனாஅ திணையே கைகோள் கூற்றுவகை யெனாஅ கேட்போர் களனே காலவகை யெனாஅ |