பெயர்ச்செவ்வெண் இறுதியும் ஏகார இடைச்சொல்லானாகிய எண்ணின் இறுதியும் எவ்விடத்துவரினும் இவை தொகையின்றி நடவா தொகை பெற்றே முடியும் என்றவாறு. யாவயின் என்றது வழக்கும் செய்யுளுமாகிய இடங்களை, எ-டு:- மாத்திரை எழுத்தியல் அசை வகை எனாஅ ........ஆறுதலையிட்ட அந்நாலைந்தும் எனவும் உயர்திணை என்றா அஃறிணை என்றா ஆயிணரெண்டென்ப தினைநிலை வகையே எனவும் படைகுடி கூழமைச்சு நட்பரணாறும் உடையானரசருள் ஏறு எனவும் தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே எனவும் வரும். “இனிக் கண் கால் அகம்புறம்” (வேற்-20) என்னும் சூத்திரத்துள் எனா என்பதும், ஒப்பும் உருவும் (பொருளி-53) என்னும் சூத்திரத்துள் என்றா என்பதும், நிலப்பெயர், குடிப்பெயர் (பெய-11) என்னும் சூத்திரத்துள் ஏகாரமும் தொகை பெற்றிலவால் எனின் இவைமுறையே, அன்ன பிறவும் எனவும் எல்லாம் எனவும் அனைத்தும் எனவும் தொகைப் பொருண்மைத்தாகிய சொற்களைக் கொண்டு முடிந்தமையான் தொகை பெற்றனவேயாம். ‘மற்றுச் செல்லல் இன்னல் இன்னாமையே’ (உரி-7) எனச் செவ்வெண் தொகை பெற்றிலதால் எனின் இன்னோ ரன்ன செய்யுள் விகாரத்தான் தொக்கன எனவே படும்; என்னை? யாவயின் வரினும் தொகையின்றியியலா’ என ஆசிரியர் யாப்புறுத்தமையான் என்க. உம்மை எண் உருபு தொகல் |