உ-ம்: புலவிற் கெண்டை, யானை தேர்குதிரை காலாள் என்னும் பல பெயர் உம்மைத் தொகைகள் ஒரு சொல் நடையவாய்க் கிடந்தன ‘வந்தன’ என்னும் தம் வினையாகிய பயனிலைகளைக் கொள்ளும் வழியும், ‘புலியும் வில்லும் கெண்டையும் கிடந்தன’, ‘யானையும் தேரும் குதிரையும் காலாளும் வந்தன’ என உம்மை விரிந்து நின்ற பொருளைத்தந்தே நிற்குமாறு போல இவ்வும்மைத் தொகைகள், ‘புலிவிற் கெண்டை வைத்தான்’, ‘யானை தேர் குதிரை காலாள் ஏறிந்தான்’ என உருபு ஏற்று நின்ற வழியும், புலியும் வில்லும் கெண்டையும் வைத்தான். யானையும் தேரும் குதிரையும் காலாளும் எறிந்தான் என உம்மை விரிந்து நின்ற பொருளைத் தந்தே நிற்றல் வேண்டும். அங்ஙனம் உம்மை விரிந்து நிற்குமிடத்து வைத்தான் வினை முதல் வினைக்குப் புலியும் வில்லும் கெண்டையும் செயப்படு பொருளாய் இரண்டாம் உருபே விரிந்து நிற்றலும், எறிந்தான் என்னும் வினை முதல் வினைக்கு யானை முதலியன செயப்படுபொருளாய் இரண்டாம் உருபே விரிந்து நிற்றலும் உணர்க. “குன்றி கோபம் கொடி விடு பவளம் ஒண்செங் காந்தள் ஒக்கும் நின்னிறம்” என்னும் பலபெயர் உம்மைத் தொகைக்கும்உம்மையும் உருபும் விரித்தே பொருள் உரைக்க. இக்குன்றி முதலியவற்றைச் செவ்வெண் ஆக்கி, இவற்றை எனத் தொகை கொடுத்து உருபு விரித்துழியும் அச்சுட்டு அக்குன்றி முதலியவற்றையே சுட்டுதலின், அக்குன்றி முதலியன செயப்படு பொருளாயே நிற்குமாறும் உணர்க. அன்றி அவை செவ்வெண் ஆயின், ‘நில நீர் வளி விசும் பென்ற நான்கின் அளப்பரியை’ (பதிற். 14) என்றாற் போல உம்மையும் உருபும் விரித்தற்குப் பொருந்தாது எழுவாயாய், நான்கு என்னுந் தொகைச் சொற் பயனிலை கொண்டு நிற்றல் வேண்டும் என்று உணர்க. இவை உம்மைத் தொகைக் கண் உருபு தொக்கன. இங்ஙனம் இரண்டு தொக்கனவற்றை என்ன தொகையென்று கோடுமோ எனின், புலியையும் வில்லையும் கெண்டையையும் வைத்தான் என விரித்துழி எண்ணுப் பொருள் தந்து நிற்கும் உம்மையினும் சொற்றொடர்ப் பொருளை உணர்த்தி நிற்பது உருபு ஆதலின் அச்சிறப்பு நோக்கி உருபு தொகை என்றே கோடும். இனிப் ‘பாட்டும் கோட்டியும் அறியாப் பயமில் தேக்குமரம் போல் நீடிய ஒருவன்’ இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி’ (உரி1) என்னும் இவை உம்மைவிரிந்து நின்று உருபு தொக்கன. |