உருபும் தொக்க வழியும் உருபுதொகை எனப்படும் என வழுவமைத்தது, ‘இரண்டு தொக்கனவற்றை என்ன தொகை என்று கோடுமோ எனின்....அச்சிறப்பு நோக்கி உருபுதொகை என்றே கோடும்’ என்ற நச்சினார்க்கினியர் வாக்கியங்களாலும் நன்கு புலப்படும். சிவ. தெய்வச்சிலையார், “உம்மையான் எண்ணப்பட்ட பொருளின் கண்வரும் உருபாகிய உம்மை ஒரோவிடத்துத் தொகுதலும் நீக்கார்” எனப் பொருளுரைத்து, ‘இயங்குபடையரவம் எரிபரந்தெடுத்தல், வயங்கல் எய்திய பெருமையானும், கொடுத்தல் எய்திய கொடைமையானும், (புறத். 8), என்று உதாரணம் காட்டினர். இவர் கருத்தை”எண்ணேகாரம் இடையிட்டுக் கொளினும், எண்ணுக் குறித்தியலும் என்மனார் புலவர்” (இடை-40) என்னும் சூத்திரத்தில் அடக்கிக் கொள்ளலாம், உருபு என்ற சொல் உம் இடைச்சொல்லைக் குறித்ததாக அவர் கொண்டார். அன்றியும் ‘தொகல்’ என்பதற்கு ‘ஒரோவிடத்துத் தொகுதல்’ என்றும் கொண்டார். அது வலிந்து கொண்டதாகவேயாகும். பால. கருத்து:- உம்மை எண்ணின்கண் வேற்றுமை உருபுதொக்கும் வருமென்கிறது. பொருள்:- எண்ணும்மையின் கண் வேற்றுமை உருபு தொக்கும் வருதலை (ப்பிழைஎன) நீக்கார் ஆசிரியர். எ-டு: புலியும் வில்லும்கெண்டையும் நாட்டினான் எனவும் யானையும் குதிரையும் தேரும் எறிந்தான் எனவும் இசையினும் குறிப்பினும் பண்பினும்தோன்றி எனவும் வரும் உருபெனப் பொதுப்படக் கூறினாராயினும் ஏற்புழிக்கோடல் என்பதனான் இரண்டாவதும் ஏழாவதுமே தொகுமெனக் கொள்க. செவ்வெண்ணின் கண் உருபுதொக்கு வருதல் “பிறிது பிறிதேற்றலும் உருபு தொக வருதலும் (வேற்-மய-21) என்பதனாற் பெறப்பட்டமையின் “குன்றி கோபம் கொடிவிடுவளம்’ என்றாற் போல்வனவற்றை ஈண்டு உதாரணமாகக் காட்டுதல் பொருந்தாதென்க. |