என்பது வினையாலணையும், பெயராகக் கொள்ளப்படும். அதையே ‘வந்தின்று சென்றது’ என்னும் வழக்கு இல்லை. இனி, எண்ணுப் பொருளில் வரும் போதே உம் உந்தாகும் என்றார் தெய்வச்சிலையார். மாக விசும்பின்’ என்னும் புறப் பாட்டில் (400) ‘நார் அரி நறவின் நாண் மகிழ் தூங்குந்து என ஓரிடத்துமட்டுமே வந்துள்ளமையால் அது பொருந்தவில்லை. அன்றியும் ஆசிரியர் ‘பன்முறையானும்’ என்னும் சூத்திரத்தில் வினையெஞ்சுகிளவி அடுக்கி வரும் என்றாரேயன்றி (வினையியல்.36)ப் பெயரெச்சக்கிளவி அடுக்கிவரும் என்றாரல்லர். அச்சூத்திரத்தில் பெயரெஞ்சுகிளவியும் அடுக்கி வரும் எனச் சேனா வரையர் சேர்த்துக் கொண்டார். தெய்வச் சிலையார் சேர்க்கவில்லை. அதனால் தெய்வச்சிலையார்க்கு உம் உந்தாவது வினைமுற்றிலேயே என்னும் கருத்துண்டு போலும் எனக் கொள்ளலாம். அவ்வாறாயின் பலர் பாலுக்கு விலக்கப்பட்ட செய்யும் என்பது உம் உந்தாங்கால் விலக்கப்படாது என்பதும் அவர் கருத்தாகலாம். பால. கருத்து; உம் ஈறுதிரிந்து நிற்கும் இடமும் உண்டு என்கின்றது. பொருள்; வினைச் சொல் இறுதியாய் நிற்கும் உம் மீறு உந்து என வடிவு திரிந்து இடனும் உண்டு. உம்மை எதிர்மறை-ஆரும் ஏயும் அசைநிலை எ.டு- நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து-நாரரி நறவின் நாள் மகிழ்தூங்குந்து-எனவரும். இவ்வும்மை வினைசெயல் மருங்கின் காலமொடு வரும் இடைச் சொல்லாகும். ‘இடனுமாருண்டே’ என்றதனான் திரியுமிடம் சிறுபான்மையாதல் புலப்படும். இவ்வும்மை செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சத்தினது என்பது ஏற்பழிக்கோடலான் உணரப்படும். பொருள் வேறுபடாமல் வடிவுமட்டும் வேறுபடுதலின் “தம்மீறு திரிதலும்” என்னும் விதிபற்றி இடையியலுள் இதனை வைத்தார். எண்வகைப் பொருட்குறிப்பு ஏற்றுவரும் உம்மை இடைச்சொல் வேறு; வினை செயன் மருங்கிற்காலமொடு வரும் இவ் உம்மை இடைச்சொல் வேறென அறிக. |