இ-ள் : மேற் சொல்லப்பட்ட இடைச் சொற்கள் எல்லாம் தனித்தனியே இதற்கு இது பொருள் என எடுத்து உணர்த்தப் பட்டனவாயினும் வினையோடும் பெயரோடும் குறிக்கப் புலப்பட்டு மற்றொரு வேறுபாட்டனவாகி வரினும் அவ்வேறுபாடு ஆராய்ந்து அதுவும் அதற்கு இலக்கணமாகக் கொள்க. எ-று. உ-ம் : ‘ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல் தத்த மரபிற் றோன்றுமன் பொருளே’ என்றவழி மன் அசை நிலையாயிற்று. 1உறக்குந் துணையதோர் ஆலம்வித் தீண்டி யிறப்ப நிழற்பயந் தாஅங்-கறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி, 38) என்பதுனுள் 2இசை நிறையாயிற்று. ‘கான்கெழு நாடர் படர்ந்தோற்குக் 3கண்ணும் படுமோ என்றிசின் யானே’ என்றவழி உம்மை அசை நிலையாயிற்று. ‘தேவரே தின்னினும் வேம்பு’ (நாலடி. 112) என்றவழி ஏகாரம் சிறப்புக் குறித்து நின்றது. மழைக்குறி கண்டு ‘மழை பெய்யும் போலும்’ என்றவழிப் போலும் என்றது ஐயங்குறித்து நின்றது. ‘தேவாதி தேவனவன் சேவடி சேர்து மன்றே’ (சிந்தா.1) என்றவழி ‘அன்றே’ என்பது முழுதும் அசைநிலையாயிற்று. ‘சென்றீ பெரும நிற்றகைக்குநர் யாரே’ (அகம். 46) என்ற வழி ஏகாரம் ஈற்றசையாயிற்று.
1. பொருள்: மிகச் சிறியதோர் ஆலம்விதை நல்ல நிலத்து வீழ்ந்து வேர்,கிளை இலை முதலியவாகத் தழைத்து நெருங்கி,மிகவும் நிழல் கொடுத்தது போல, அறத்தால் வரும் பயனும் அறம் மிகச் சிறியதாயினும் தக்காரிடம் செய்யப்படுமானால் அது ஆகாயப் பரப்பும் சிறியது என்னும்படி மிகப் பெரிதாய்ப் பரந்துபடும். 2. அறப்பயனும் என்பதன் உம்மை இசை நிறையாயிற்று. 3. ‘கண் படுமோ’ என்பது ‘கண்ணும்படுமோ’ என்றிருத்தலில் உம் அசை நிலை.. |