இனி உருபு பொருண்மை நோக்கிய ஐகாரமும், ‘நேரை நோக்க நாரரி பருகி’ எனவும், ‘முனையுண்டவர் உருகும் பசுந்தினைப் பிண்டியும்’ எனவும் அசையிலையாய் வருதலும் கொள்க. ‘தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே விசும்பிற் றோகைச் சீர்போன் றிசினே’ என்பன தண்ணென்றது, போன்றது என முற்றுச்சொல் சின் அசைக்கண் படுதலும் கொள்க. பிறவும் செய்யுட்கண் வேறுபடுவன எல்லாம் இதனான் அமைத்துக் கொள்க. ஆதி. இடைச்சொல் இன்ன சொல்லுக்கு இன்ன பொருள் எனத் தெளிவான முறையில் சொல்லப்பட்டிருப்பினும் வினையோடும் பெயரோடும் தாம் எண்ணி யுணருமாறு தோன்றிப் பொருள் வேறு வேறு காட்டின் ஆய்ந்து தெளிந்து நல்லதைக் கொள்க. இவனே திருடன்?-இங்கு வினா. இவனே திருடன்-முடிவு சுட்டினால் தேற்றம். இவனே அவனே எவனே ஆகுக-இசைநிறை. ஒரே சொல்லில் உற்ற ஏ இடங்கண்டு பொருள் தருகிறது. அது எண்ணி ஆராய்தற் பாலது. அவர் யாவரோ? யாவர் என்பது வினா. ஆதலின் ஓ ஈற்றசை; வினா அன்று. அவர் கொல் நம் அரசர்-ஐயம். அவர் கொல் நம் அரசர்-அசை அவர் நம் அரசர் கொல் -வினா. இவ்வாறு அவ்வவ்விடத்தில் தரும் பொருள்கண்டு இடைச் சொற்களின் உண்மை தெளிதல் வேண்டும். பால. கருத்து ; தத்தங்குறிப்பிற் பொருள் செய்வனவற்றிற்கு ஓதப்பெற்ற பொருளினின்று அவை ஓரோ வழி வேறுபட்டு வருமென்பதும் வேறுபடுதற்குச் சார்பும் கூறுகின்றது. பொருள் ; மேற்கூறிய இடைச் சொற்கள், அவ்வச்சொற்கு அவை அவை பொருளென அப்பொருள் கொள்ளுமாறு கிளந்து கூறப்பெற்ற இலக்கணத்தனவாயினும்; அவையவை முன்னும் பின்னும் வரும் வினைச்சொல்லொடும் |