பெயர்ச்சொல்லொடும் வைத்து ஆராய்ந்து உணருமாறு தோன்றித் திரிந்து வேறுபட்டுவரினும், அவ்வவ்வேறு பாட்டினைத் தெரிந்து பொருந்துமாறு அமைத்துக் கொள்க. முன்னர் “பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும்” என்றது எல்லா இடைச் சொற்கும் அவைவரும் இடம் கூறும் முகத்தான் பொது விலக்கணங் கூறியவாறாம். ஈண்டு “வினையொடும் பெயரொடும் நினையத்தோன்றி” என்றது தத்தம் பொருளவாய் வரும் இடைச்சொற்கள் பல்வேறு பொருள் குறித்து நிற்பதற்குக் காரணங்கூறுமுகத் தான், தத்தம் பொருளவாய்வரும் இடைச்சொற்களுக்குப் புறனடை கூறியவாறாம். அதனான் அவ்வேறுபாடு தோன்ற ஈண்டு வினை முற்கூறப்பட்டதென்க. எ-டு ; சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ” என ஓகாரம் ஈற்றசையாக வந்தது. “அதுமன் கொண்கன்தேரே”மன், அசைநிலையாக வந்தது. “ஊரெனப்படுவது உறையூர்” என, என்பது சிறப்பின்கண் வந்தது. “ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே” மா அசைநிலையாக வந்தது. “படர்ந் தோர்க்குக் கண்ணும்படுமோ என்றிசின் யானே” உம் அசைநிலையாக வந்தது. பிறவும் இவ்வாறு வருவனவற்றை ஓர்ந்தமைத்துக் கொள்க. புறனடை |