“தடுமாறு தொழிற் பெயர்க் கிரண்டும் மூன்றும், கடி நிலையிலவே பொருள் வயினான’ (வேற்.ம.10) என்றவழி ஆன அசைநிலையாயிற்று. ‘செய்வினை மருங்கிற் செலவயர்ந்து யாழநின், கைபுனை வல்வின் ஞாணுளர்தீயே’ (கலி.7) என்றவழி யாழ அசைநிலையாயிற்று. பிறவும் அன்ன. இடையியல் முற்றும். நச். இஃது அவற்றிற்குச் சொற் புறனடை கூறுகின்றது. இ-ள் ; கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும்-மேல்சார்பும் இடமும் குறிப்பும் பற்றிச் சொல்லப்பட்டன அன்றி வேறு பிறவரினும், கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளல்-அவற்றையும் அச்சொற்களின் மூவகைய வாகக் கூறிய இலக்கணத்தான் உணர்ந்து கொள்க. எ-று. உ-ம் ; ‘சிறிது தவிர்ந்தீக மாளநின் பரிசிலர் உய்ம்மார்’ என மாளவும், ‘சொல்லேன் தெய்ய நின்னொடு பெயர்ந்தே’ எனத்தெய்யவும், ‘அறிவார் யாரஃதிறுவுழியிறுகென’ என வனவும், ‘அஞ்சுவ தோரும் அறனே’ (குறள் 366) என ஓரும், ‘செலீஇயர் அத்தை நின்வெகுளி’ (புறம்.6) என அத்தையும், ‘செழுந்தேர் ஓட்டியும் வென்றீ’ என ஈகாரமும், ‘காத னனமா நீமற்றிசினே’ என இசினும், ‘பணியுமாம் என்றும் பெருமை’ (குறள்678) என ஆமும், ‘ஈங்கா யினவால் என்றிசின் யானே’ என ஆலும், ‘புனற் கன்னி கொண்டிழிந்த தென்பவே’ (சீவக.36) என என்பவும், ‘சேவடி சேர்தும் அன்றே’ (சீவக.1) என அன்றும் அசை நிலையாய் வந்தன. ‘குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே’ (திருமுருகு 217 எனத் தொறு, தான் சார்ந்த மொழிக்குப் பன்மையும் இடமும் உணர்த்திற்று. இது ‘நாடோறும் நாடி’ என நீண்டும் நிற்கும் |