சொல்லதிகாரம் - இடையியல்15

யொடும்   சார்ந்து     நின்றே   பொருளுணர்த்தும்   என்பது   இச்
சூத்திரத்திற் கூறப்பட்ட கருத்து.

மூன்றாவது  கருத்து  சுப்பிரமணிய  சாஸ்திரியார்  கூறியது. மூன்று
கருத்துகளையும்   ஏற்று   இச்சூத்திரக்   கருத்தைப்   பின்  வருமாறு
கூறலாம்:-

“இடைச்  சொல்லாவது    தனித்து   நின்று   பொருளுணர்த்தாது,
பெயரொடும்    வினையொடும்    சார்ந்து   பெயர்ப்   பொருளையும்
வினைப்பொருளையும்    தனக்குரியதாகக்   கொண்டு  வெளிப்படுத்தி
நிற்பதாம்.”

ச. பாலசுந்தரம்

கருத்து : -  நிறுத்த  முறையானே  இடைச்சொற்களின் இலக்கணங்
கூறத்   தொடங்கி  இச்சூத்திரத்தான்   அவற்றது  பொதுவியல்பாமாறு
கூறுகின்றார்.

பொருள் : - இடைச்சொல்  என்று  கூறப்படுபவை   பெயரொடும்
வினையொடும்  வழங்குதலைப்  பெற்றியலும், அவை தாமாக  நடக்கும்
இயல்பில்லாதன,  பால் முதலியவற்றைக் காட்டும்  இடைச்சொற்களொடு
கூடாமல்    நிற்கும்    முதனிலைச்     சொற்கள்    யாவும்   உரிச்
சொற்களேயாயினும்  ஆ,  கா,  பூ   என்றாற் போலவும் வா, போ, கா,
என்றாற்    போலவும்   வருமிடத்து   வினை  முதற்   பொருள்தரும்
இடைச்சொல்லும்,   ஏவற்பொருள்   தரும்  இடைச்  சொல்லும் குன்றி
நின்று  பெயராயும்,  வினையாயும்  வரும்  ஒரெழுத்து ஒரு மொழியாய்
சொற்கள்    இருவகை   வழக்கினும்    நடைபெறுதலானும்,   தத்தம்
பொருளவாய்  வரும்  இடைச்  சொற்களும்   வேற்றுமை உருபுகளும்,
பெயர் வினைகளைச் சார்ந்து வருதலானும்  பொதுப்படப்  பெயரொடும்
வினையொடும் என்றார்.

இதனைப் பின்னர் ஆசிரியர்,

“அவ்வச் சொல்லிற் சுவையவை பொருளென
மெய் பெறக் கிளந்த இயல வாயினும்
வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித்
திரிந்து வேறு படினும்தெரிந்தனர் கொளலே”   (இடை-47)

எனக் கூறுதலான் அறியலாம்.

பெயரொடும் வினையொடும் நடைபெறுதலாவது: -  அவற்றிற்கு
உறுப்பாகி ஒருங்கு  இயலுதலும்  அவற்றைச்  சார்ந்து   இயலுதலுமாம்;
“தமிக்கியல்பிலவே”    என்றது    தனித்து   நின்று  தம்   பொருள்
உணர்த்தா என்றவாறாம்.