என்னும் சூத்திரவுரையான் நன்கு விளங்கும். சிவ. உரையாளர் உரைகளைக் கொண்டு இச்சூத்திரத்துக்குப் பின் வருமாறு பொருளும் உதாரணமும் கூறலாம். புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதநவும்: புணரியல் நிலையிடை உதவுநவும், புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவுநவும் என இரண்டாகக் கொள்க. மரக்கிளை என்பது மரத்துக்கிளை என அத்துச்சாரியை பெறுவது புணரியல் நிலையில் அத்துச்சாரியை உதவியது என்னலாம். கிளியின் கால் என்றவிடத்து இன் சாரியையும் அதுவே. எல்லாவற்றையும், எல்லா நம்மையும் என்னுமிடங்களில் வற்றுச்சாரியை அஃறிணைப் பொருளுக்கும் நம்சாரியை உயர் திணைப் பொருளுக்கும் உதவியவாறு காண்க. இதனால் பொருட்சிறப்பில்லாச் சாரியைகளும் பொருட்சிறப்புடைய சாரியைகளும் புணரியல் நிலையிடையுதவும் என்பது கூறப்பட்டது. வினைசெயல் மருங்கில் காலமொடு வருவன: வினை செய்தலாவது ஒரு வினைச்சொல்லை உண்டாக்குதல். உண்டாக்குதற்கு முதல் நிலை (பகுதி) தவிர இறுதிநிலை இடைநிலை சாரியை முதலியன தேவை. அவற்றுள் விகுதியும் இடைநிலையும் காலம் காட்டுவன. இடைநிலை காலம் காட்டும்போது விகுதி காலம் காட்டாது. காலம் காட்டும் விகுதியும் காலம் காட்டா விகுதியும் உண்டு. ஒரு வினைச்சொல்லை உண்டாக்கும்போது காலம் காட்டும் இடைச்சொற்களோடு வருவனவும் இடைச்சொற்களாம். உண்டு - உண்டேன். இதில் (உண்+டு என) டு விகுதி இறந்தகாலம் காட்டியது. உண்டேன் இதில் (உண்+ட்+ஏன்என) டகர ஒற்றுக் காலம் காட்டியது; விகுதி காலம் காட்டவில்லை. உன்டனென் இதில் (உண்+ட்+அன்+என்+என) அன் என்பது காலம் காட்டும் இடைநிலையுடன் வந்தது. இதில் அன் சாரியை எனப்படும். இவற்றால், வினை செயல் மருங்கில் வருவனவும் வினை செயல் மருங்கில் காலமொடு வருவனவும் இடைச் சொற்கள் ஆம் எனக்கொள்க. உண்டனென் என்பதில் அன்சாரியையினையும் என் விகுதியினையும் வினைசெயல் மருங்கின் வந்தன எனவும், டகர ஒற்றினை வினை செயல் மருங்கின் காலமொடு வந்தது எனவும் கொள்க. அதனால் வினைசெயல் மருங்கின் இடைச் சொல்லாக வருவன விகுதி, இடைநிலை, சாரியை என்னவாம் என்க. |