2) வினை செயன் மருங்கிற்காலமொடு வருந:- திணையும் பாலும் இடமும் காட்டும் இறுதி இடைச் சொற்களும், காலங் காட்டும் இடைச்சொற்களுமாம். இதனை வினை செயல் மருங்கின் வருநவும் காலமொடு வருநவும் எனப் பிரித்துக் கூட்டிப் பொருள் கொள்க. வினைச்சொற்கள் ஒருமொழிப்புணர்ச்சியாகலின் அவற்றை நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியுமாக வைத்துப் புணர்த்தற்கு இயலாமையின் கால இடைநிலைகளை அம்மாம் முதலிய பால்காட்டும் இறுதி இடைச் சொற்களொடு உடனாக வைத்தும், உம்- மன் முதலியவற்றை ஈற்றின் கண் வைத்தும் உணருமாறு ஓதினார். இதனான் காலமுணர்த்தும் எழுத்துக்களும் அசைகளும் இடைச்சொற்களே என உணர வைத்தார். இறுதி இடைச் சொற்கள் வினையியலுள் ஓதப்பெற்றன. குறிப்பு வினை கால இடைநிலையொடு வாராமையின், வினை மருங்கின் என்னாது “வினைசெயல் மருங்கின்” என்றார். காலம் காட்டும் இவ் இடைச் சொற்கள் சொல்லின் இடையினும் ஈற்றினும் ஏற்றபெற்றியாய் வருமென்க. எ-டு : - உண்டனன், உண்டான், உண்ணாநின்றனன், உண்ணா நின்றான், உண்பான் எனவரும் இவற்றுள் அன், ஆன், என்பவை பால்காட்டும் இறுதியிடைச் சொற்கள், ட், ஆநின்று, ப் என்பவை காலங்காட்டும் காலக்குறிப்பிடைச் சொற்கள். காலமொடு வருநவும் எனப் பொதுப்படக் கூறியதனான் உண்ணா-உண்ணான், எனவரும் ‘ஆ’ கார எதிர்மறையும், வாழ்க, வீழ்க எனவரும் வியங்கோளீறுகளும், ‘செய்யும்’ என்னும் உம் ஈறும், மன என்னும் முற்றீறும், ஒருசார் வினையெச்ச ஈறுகளும் பிறவும் கொள்க. இவற்றை எல்லாம் இவ்வாசிரியர் இந்நூற்கண் உடம்பொடு புணர்த்திக் கூறியுள்ளமையான் அறிந்து கொள்க. 3) வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந:- ஐ ஓடு கு இன் அது கண் முதலியவை உருபிடைச் சொற்கள். உருபும் என்னாது ‘ஆகுநவும்’ என்றதனான் இன்னும் ஆறுமாகிய மாற்றுருபுகளும் மாறு- உளி, உடைய எனவரும் சொல்லுருபுகளும் கொள்க. எ.டு : - வேற்றுமையியல் உரையுள் கண்டு கொள்க. |