காலன் முடவன் - வாணிகத்தின் ஆயினான் என்பவை மாற்றுருபுகள் சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே. இயல்புழிக் கோலோச்சும் மன்னவன், சாத்தனுடைய இல்லம், என்பவை சொல்லுருபுகளைப் பெற்று வந்தனவாம். பிறவும், இவ்வாறு வருவனகண்டு கொள்க. 4) அசைநிலைக்கிளவி என்பது பிற பொருளுணர்த்தாமல் செய்யுள் வழக்குப் பற்றிச் சீர்க்கு உறுப்பாகவும் சீராகவும் ஓசை நிரப்புவதற்கு வரும் சொல்லுறுப்பினை அசை என்பது மரபு. இதனை, “இசை திரிந்திசைப்பினும் இயையுமன் பொருளே” (பொருளியல் - 1) என்பதனானும் அறிக. செய்யுள் அமைப்பு நோக்கிப் புலவரான் ஆக்கிக் கொள்ள படுதல் தோன்ற “ஆகிவருநவும்” என்றார். அசையாகித்துணை புரிதலே இதன் பொருளாகும். இசைநிறைக்கிளவிக்கும் இஃதொக்கும். எ.டு : - அந்திற் கச்சினன் கழலினன் (அகம் - 79) “ஆங்கக் குயிலும் மயிலுங்காட்டி” என்பவை சீராக அசைத்து அடிநிரப்பி நின்றன. “அதுமற் றவலங் கொள்ளாது நொதுமற்கலுழும்” “உரைமதி வாழியோ வலவ” என்பவை சீர்க்கு உறுப்பாய் அசைந்து வந்தன. “பழமுதிர் சோலை மலைகிழவோனே” ஏகாரம் ஈற்றிசை யாய் சீர்நிறைத்து நின்றது. 5) இசைநிறைக்கிளவி என்பது சார்ந்த சொல்லின் பொருட்குத் துணையாகச் செய்யுட்கண், சீர் நிறைத்து ஓசைப்பற்றி வரும். எ.டு : - “ஏஎ இஃதொத்தன் என்பெறாஅன் கேட்டைக் கான்” எனவும் “அளிதோ தானேயது பெறலருங்குரைத்தே” எனவும் வரும். 6) தத்தங் குறிப்பிற் பொருள் செய்குந: - பல நிலைகளில் வரும். எ.டு : - கூரியதோர் வாள்மன் - வருகதில் அம்மவெம்சேரி சேர - சாத்தனும் வந்தான், கொன்னூர் துஞ்சினும் எனவரும். இவை இடம் நோக்கிப் பொருள்தருவன ஆதலின் “தத் தங்குறிப்பின்” என்றார். சாரியை இடைச்சொல் முதலியன பொருள்தருதலும் “குறிப்பே” என்னும் அவை ஓராற்றான் வரயறைப்படுதலின் அவை ஒழிந்த ஏனையவற்றிற்கே இக்குறியீடு செய்தார் என்க. |